News Just In

2/11/2026 04:17:00 PM

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை  இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்




1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் நேற்று (10) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயமானது 1962.07.23ஆம் ஆண்டு அரச வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரசாங்க பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1978ம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக பாதிப்பட்டதன் பின்னர், இந்த பாடசாலை தற்போதுள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் கல்வி நடவடிக்கைகள் 1979ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 1990ம் ஆண்டில், பாடசாலை பூமியானது பாதுகாப்பு தரப்பினரின் முகாமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்காக கையகப்படுத்தப்பட்டது. அப்போது பாடசாலையில் 01ம் வகுப்பு தொடக்கம் 11ஆம் வகுப்பு வரை வகுப்புகள் காணப்பட்டதுடன், சுமார் 800 மாணவர்கள் கல்வி கற்றுவந்தனர்.

பாதுகாப்பு தரப்பினர் கையகப்படுத்திய காலப்பகுதியில், இப்பாடசாலை தற்காலிகமாக வந்தாரமூலை மத்திய கல்லூரி, தேவபுரம் கஜமுகன் வித்தியாலயம் மற்றும் பல தனியார் இடங்களில் நடாத்தப்பட்டது. பின்னர், பிரதேச மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இப் பாடசாலை மீள ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த பாடசாலையானது வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுவதுடன், கல்வி நடவடிக்கைகளுக்காக இடவசதிகள் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதனடிப்படையில், பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட குறித்த பாடசாலை வளவானது கல்வி நடவடிக்கைகளுக்காக 2025.09.30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது. இந்த இடத்தின் முழுப்பரப்பு 02 ஏக்கர்களாகும். விடுவிக்கப்பட்ட பகுதியில் அடி 100×20 அளவிலான இரு கட்டடங்களும், அடி 150×20 அளவிலான கட்டடமொன்றும், அடி 40×20 அளவிலான கட்டிடமொன்றும் காணப்பட்டது.

மேலும், ஆரம்ப பிரிவிலுள்ள 112 ஆண் மாணவர்களும், 84 பெண் மாணவிகளும் அடங்கலாக மொத்தம் 196 பேர் அவர்களின் ஆசிரியர்களுடன் 2026.02.10ஆம் திகதி இந்த பாடசாலைக்கு மாற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலையின் 2025 பராமரிப்பு திட்டத்தின் கீழ் குடிநீர் வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் பங்களிப்பினால் 07 வகுப்பறைகள் நிறப்பூச்சு பூசப்பட்டன. மேலும், மக்களின் பங்களிப்புடன் பாடசாலையின் ஒரு புறத்தில் 140 மீட்டர் நீளமான வேலி கட்டப்பட்டுள்ளது.

2026.02.10ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அதிபர் மா. தவனேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments: