எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போதுதான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க தூண்டியவர்கள்தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை(10.02.2026) மாலை வெல்லாவெளியில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாகு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளால் பல அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. யானைகள் தற்போது காடுகளில் இல்லை வீடுகளை நோக்கியும் ஊர்களை நோக்கியும்தான் வந்து கொண்டிருக்கின்றன. பயிர்களை அழிக்கும் செயற்பாடுகளையும், இந்த காட்டு யானைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன அதேபோன்று பயிர்களை மாத்திரம் அல்லாமல் உயிர்களையும் யானைகள் அழித்துக் கொண்டு வருகின்றன.
எனவே காட்டு யானைகள் விடயத்தில் மிக முக்கியமான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். யானைகள் செல்லப்பிராணிகளாக இருக்கின்றபோது மனிதர்கள் கொல்லப்படக்கூடியவர்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ? என எனக்கு தெரியாது உள்ளது. காட்டில் அல்லது நிலத்தில் யானை செல்ல பிராணியாக இருக்கின்றது. நீர் நிலையங்களில் முதலை செல்ல பிராணியாக இருக்கின்றது. மனிதர்கள் இந்த இரண்டு விலங்குகளாலும் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் ஒரு விலங்கு அதிகரிக்கப்படுமாக இருந்தால் அதனை சமநிலையை ஏற்படுத்துவதற்காக அந்த விலங்குகளை கொல்வது ஒரு வழியாக இருக்கின்றன. ஆனால் இலங்கைப் பொறுத்தவரையில் பிராணிகள் மீது மிகவும் அன்புகளை செலுத்துகின்றார்கள்.
அது பல மனிதர்களை அடித்துக் கொன்றாலும்கூட அவ்வாறு அடித்துக்கொல்கின்ற பிராணிகளையும் அவர்கள் செல்லமாகவேதான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மக்களை பொறுத்தவரையில் மக்களை கொல்கின்ற போதும் அது பற்றி அவர்கள் சிந்திக்கின்ற அளவு மிக மிகக் குறைவாக இருக்கின்றது.
மனிதனை அல்லது சொத்துக்களை யானை துவம்சம் செய்யுமாக இருந்தால் அதனை யானை மனிதன் முரண்பாடு என அழகாகச் சொல்கின்றார்கள். ஆகவே இந்த விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுத்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அபிவிருத்தி விடயத்திலும் பாதைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், என பல அபிவிருத்தி செய்வதற்கு இருக்கின்றன. மிக விரைவாக இந்த விடயங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். எனவே கடந்த கால அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கம் இனவாத அல்லது மதவாத அரசாங்கமாக அல்லாமல் மக்கள் எல்லோரையும் பொதுவாக சமத்துவமாக நோக்கி பணிகள் செய்யக்கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவேற்றி இருக்கின்றது. இன்னும் வரும் வருடங்களிலாவது தேசிய இனப் பிரச்சினையை தீர்த்து நீங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற போது தமிழ் மக்கள் அன்றைய தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கின்ற அந்த சந்தர்ப்பத்தை வழங்காமல், இனி வருகின்ற சுதந்திர தினத்திலாவது உங்களோடு நாங்கள் கொண்டாடுவதாக இருந்தால் இந்த தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.
கைதிகள் விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்களுக்கு உரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதேபோன்றுதான் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இவற்றையும்விட மாகாண சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதை நடத்தப்படுத்த வேண்டும்.
மனித உரிமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தினால்தான் அடுத்த தடவை அரசாங்க நினைப்பது போன்று சுதந்திர தின கொண்டாட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மாறாக தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாத சூழல் காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய தீர்வு காணப்படாத நிலையில், நாங்கள் இலங்கையின் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு மனரீதியாக நாங்கள் தயார் இல்லை.
தமிழரசுக் கட்சியில் எட்டு பேரைக் கொண்ட பாராளுமன்ற குழு ஒன்று உள்ளது. அந்த பாராளுமன்ற குழு ஊடாக பாராளுமன்ற குழு தலைவர் செய்யப்பட்டாரா என பலரும் கேட்கின்றார்கள். ஆனாலும் எமது கட்சியின் அரசியல் குழு தான் பாராளுமன்ற குழு தலைவரை தெரிவு செய்திருக்கின்றது தவிர எமது பாராளுமன்ற குழுவிடம் இந்த பாராளுமன்ற குழு தலைவர் தெரிவு சம்பந்தமாக பேசவில்லை. மாறாக அரசியல் குழு முடிவு எடுத்த பின்னர் அந்த செய்தியை சொன்னார்கள். பாராளுமன்றக் குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் அந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை.
எமது கட்சிக்காக தொடுக்கப்பட்டுள்ளது வழக்கு எப்போது முடிவுறுத்தப்படுகின்றதோ அப்போதுதான் எமது கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறும். வழக்கு இருக்கும் வரை பொதுச்சபை கூட்டம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை. வழக்கு வைத்தவர்கள், வழக்கு வைக்க தூண்டியவர்கள்தான் இந்த விடயம் பற்றி ஊடகங்களுக்கு பதிலளிக்க முடியும்
இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அது பதிவு செய்யப்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments: