News Just In

2/11/2026 03:22:00 PM

நோன்புக்கு முன் மின் விளக்குகள் ஒளிரச் செய்வதற்கு நடவடிக்கை, வீதிகளை சீரமைப்பது தொடர்பில் தீவிரம்!

நோன்புக்கு முன் மின் விளக்குகள் ஒளிரச் செய்வதற்கு நடவடிக்கை, வீதிகளை சீரமைப்பது தொடர்பில் தீவிரம் – நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பு


நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளி பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒளிராமல் காணப்படும் மின்விளக்குகளை நோன்பு ஆரம்பிக்கும் முன்னர் ஒளிரச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தெரிவித்தார்.

மேலும், பிரதேசத்தின் முக்கிய வீதிகளை சீரமைப்பதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் 8வது சபை அமர்வில் வெளியிடப்பட்டது. குறித்த அமர்வு இன்று (11) நாவிதன்வெளி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் பிரதேசங்களில் ஒளிராமல் காணப்படும் மின்விளக்குகளை நோன்பு ஆரம்பிக்கும் முன்னர் ஒளிரச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து முஸ்லிம் உறுப்பினர்களும், முக்கிய வீதிகளை சீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் தொடர்பில் சபை உறுப்பினர்களும் முன்வைத்த முன்மொழிவுகளை அடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நாவிதன்வெளி பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இன ரீதியான வேறுபாடுகள் இல்லாமல் சேவைகள் நடைபெறுவதாகவும், காலநிலை பிரச்சனையால் திட்டமிட்ட வீதி புனரமைப்பு கள் காலதாமதமாகி உள்ளதாகவும் இதன்போது தவிசாளர் மேலும் குறிப்பிட்டார். மேலும் மடுவத்தில் இறைச்சி கடை உரிமையாளர்களால் அறுக்கப்படும் இறைச்சிக் கழிவுகளை அகற்றுவதில் உள்ள முரண்பாடுகள், இறைச்சிக் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாட சபை தீர்மானித்தது.

சபை அமர்வு உப தவிசாளர் மற்றும் 10 உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரதேச மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சபையில் நிலவும் பிரச்சினைகளை பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

No comments: