மாட்டிறைச்சி விற்பனை தொடர்பாக காலக்கெடு விதித்த அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ்
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் தொடர்பாக பொதுமக்கள் முன்வைத்த புகார்களை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் நேரடியாக களத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனடிப்படையில், மாட்டிறைச்சி விற்பனை தொடர்பாக கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, விலை நிர்ணயம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்தது.
அதன்படி, 800 கிராம் தனி இறைச்சி மற்றும் 200 கிராம் எலும்பு சேர்த்து ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், எலும்பு இன்றி தனி இறைச்சி ஒரு கிலோ 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தீர்மானத்தை எதிர்த்து சில மாட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் கடைகளை திறக்காமல் மூடியுள்ளதாகவும், இவ்வாறான மக்கள் விரோத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மூடப்பட்ட மாட்டிறைச்சி கடைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) க்குள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடுவிற்குள் கடைகளை திறக்கத் தவறும் விற்பனை நிலையங்களுக்கு மாற்றாக, புதிய மாட்டிறைச்சி கடைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதாகவும் தவிசாளர் உவைஸ் தெரிவித்தார்.
அதற்கமைய, அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் புதிய மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான இடங்களை தவிசாளர் இன்று நேரில் பார்வையிட்டார்.
மாட்டிறைச்சி விற்பனை விலை கட்டுப்பாடு மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு, அட்டாளைச்சேனை மக்களிடையே பரந்த ஆதரவு கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments: