நூருல் ஹுதா உமர்
கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் முஸ்லிம் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்யும் கோத்தா அரசின் கொள்கைக்கு எதிராக, அவற்றை மதச்சார்பான முறையில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று திறந்தவெளியில் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர், பிரபல அரசியல்வாதியும் கல்வியாளருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அவர்களின் மறைவையொட்டி, முஸ்லிம் சமூகமும் சிவில் அமைப்புகளும் நன்றியுடன் இரங்கல் தெரிவிக்க முன்வர வேண்டும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சவால்களையும், ஆழமான உணர்ச்சி வேதனைகளையும் எதிர்கொண்ட முஸ்லிம் சமூகத்தின் மனஉளைச்சலை ஆழமாகப் புரிந்துகொண்ட ஒருவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண. அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையையும் மனிதநேயப் பார்வையையும் இணைத்து, ஜனாஸாக்களை மதச் சடங்குகளுக்கு ஏற்ப நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவது பொதுசுகாதாரத்திற்கு பாதிப்பாக அமையாது என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.
அந்த காலகட்டத்தில் நிலவிய அச்சம் மற்றும் அரசியல் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டபோதிலும், சமூக நீதி, மதச்சார்பற்ற சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு பலருக்கும் துணிவூட்டியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை புரிந்துகொண்டு, அவர்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை வழங்க வேண்டும் என்ற அவரது குரல், ஒற்றுமைக்கான அழைப்பாக அமைந்தது.
மேலும், பல்வேறு இன, மத சமூகங்களுக்கிடையே புரிதலை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார். அதனால், அவரது மறைவு ஒரு அரசியல்வாதியின் இழப்பாக மட்டுமல்லாது, மனிதநேயக் குரலொன்றின் இழப்பாகவும் கருதப்பட வேண்டும்.
எனவே, அவரின் மறைவையொட்டி முஸ்லிம் சமூகத் தலைவர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நன்றியுணர்வுடன் இரங்கல் தெரிவிப்பது, கடந்த காலத்தில் அவர் எடுத்த மனிதநேய நிலைப்பாட்டிற்கு உரிய மரியாதையாகவும், சமூக ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் நடவடிக்கையாகவும் அமையும்.
பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அவர்களின் சேவைகள் என்றும் வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டியவையாகும் என்றும் கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
No comments: