News Just In

2/28/2026 01:54:00 PM

“தாய்மொழி எங்கள் அடையாளமும் பாரம்பரிய பெருமையும் ஆகும்” : தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச தாய்மொழி தின விழா !

 “தாய்மொழி எங்கள் அடையாளமும் பாரம்பரிய பெருமையும் ஆகும்”  : தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச தாய்மொழி தின விழா !


நூருல் ஹுதா உமர்

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் மொழித்துறை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வு 2026.02.27 ஆம் திகதி கலை மற்றும் கலாசார பீட கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

“தாய்மொழி எங்கள் அடையாளமும் பாரம்பரிய பெருமையும் ஆகும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, தாய்மொழியின் செழுமை, பண்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்தது.

மொழித்துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து, கவிதை, நாட்டார் பாடல்கள், உரைகள், “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் அறிமுகம் மற்றும் “தாய்மொழி வழிக்கல்வி இன்றைய காலத்துக்கு அவசியமா – அவசியமில்லையா?” என்ற தலைப்பிலான பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை களைகட்டச் செய்தன.

பிரதம அதிதி உரையாற்றிய பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தாய்மொழி என்பது ஒருவரின் அடையாளத்தையும் சமூக வளர்ச்சியையும் நிர்ணயிக்கும் அடிப்படை சக்தி எனக் குறிப்பிட்டார். மொழி மனித சிந்தனையின் பிரதான ஊடகமாக விளங்குவதோடு, அறிவியல் முன்னேற்றத்திற்கும் தனிமனித ஆளுமை மேம்பாட்டிற்கும் தாய்மொழிக் கல்வி உறுதுணையாக அமைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சீனா, ஜப்பான், இந்தியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களது தாய்மொழிகளைப் பாதுகாத்து வளர்த்ததன் மூலம் உலகளாவிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், மொழி அடையாளம் தொடர்பான போராட்டங்கள் பங்களாதேஷ் உருவாக்கத்திற்கும் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போருக்கும் காரணிகளில் ஒன்றாக அமைந்தன என்பதை நினைவூட்டிய அவர், மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி அல்ல; அது அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு தளங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகும் என்றும் வலியுறுத்தினார்.

தலைமையுரையாற்றிய பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப், சர்வதேச தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம் இளைய தலைமுறையினரிடத்தில் போதியளவில் உணரப்படாமை கவலைக்குரியது எனத் தெரிவித்தார். மொழி மற்றும் பண்பாட்டு தினங்களை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு கல்விச் சமூகத்திற்கே உரியது என்றும், தமிழ் மொழி எந்த ஒரு மதத்துடனும் மட்டும் இணைக்கப்படக் கூடாது; அது அனைத்து சமயங்களையும் தழுவிய பொதுப் பண்பாட்டு மொழி என்றும் விளக்கினார்.

மொழித்துறையின் நான்காம் ஆண்டு மாணவர் ஆர்.எம். மனாஸ் எழுதிய “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. நூல் விமர்சனத்தை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் நிகழ்த்தினார்.

பட்டிமன்றத்துக்கு சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். அய்யூப் நடுவராகப் பணியாற்றினார். நன்றியுரையை மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், பேராசிரியர் கலாநிதி எம்.எ.எஸ்.எவ். சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ஆர். பாத்திமா சீபா, விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா, புவியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அய்யூப் உள்ளிட்ட பல கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments: