
சமகாலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திப் பேசுபொருளாக மாறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் நாமல் ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம், ஒரு தனிப்பட்ட பயணமாக அன்றி அனைத்துத் தளங்களிலும் தொய்வடைந்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தின் சர்வதேச மறுபிரவேசத்திற்கான ஒரு திட்டமிட்ட நகர்வாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உலகின் புகழ்பெற்ற விவாத மேடைகளாக அறியப்பட்ட Oxford Union (25) மற்றும் Cambridge Union (27) ஆகியவற்றில் உரையாற்ற அவர் ஒப்புக்கொண்டமை சர்வதேச அளவில் தமக்கான ஜனநாயக அங்கீகாரத்தை மீளப் பெறும் ஒரு முயற்சியாகும்.
இந்த நகர்வுகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாகப் பாரிய எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன ஆனால் இந்தமுறை வழமையான போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் அமைப்புகளையும் தாண்டி பிரித்தானியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்புகளால் இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில், “இரத்தக்கறை படிந்த ஓர் அரசியல் வம்சத்திற்கு கல்விக்கூடங்கள் களம் அமைத்துக் கொடுப்பது தமிழினப்படுகொலையை நியாயப்படுத்துவதற்குச் சமம்” எனப் பிரித்தானியாவின் கல்விக்கட்டமைப்பைக் கடுமையாகச் சாடியுள்ளன.
இந்த எதிர்ப்புகளின் விளைவாக மாணவர்களின் ஒன்றுபட்ட குரலுக்குச் செவிசாய்த்த Cambridge Union உரையை ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, நாமல் உரையாற்றச் சில மணிநேரங்களுக்கு முன்னர் Oxford Union அமைப்பும் உத்தியோகபூர்வமாக நிகழ்வை ரத்து செய்தது.
இருப்பினும், நாமல் ராஜபக்ச தரப்பு இந்த நடவடிக்கையை ஜனநாயக விரோதம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு விழுந்த அடி எனச் சித்தரிக்க முயல்கிறது.
உண்மையில், மேலைத்தேய ஜனநாயக நாடொன்றில் நின்றுகொண்டு அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசும் நாமலுக்கு பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்த தமது கடந்த காலம் தொடர்பில் தெளிவிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாதவிடத்து நாமலின் ஜனநாயக உரிமைக்கோரிக்கை வெறும் நகைப்பிற்குரியதேயாகும்.
பல்கலைக்கழகங்கள் தரப்பில், நிகழ்வின் சாத்தியமற்ற சூழல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகிய காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
இது ராஜபக்சக்கள் மீதான சர்வதேசப் பிம்பத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
ராஜபக்ச தரப்பு தனது மென் அதிகாரத்தைப் (Soft Power) பயன்படுத்திச் சர்வதேசக் கல்வி வட்டாரங்களில் நுழைய முயன்ற போது புலம்பெயர் தமிழர்கள் தங்களின் நீதிசார் பரப்புரை மூலம் அதனை முறியடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பலம் இன்னும் குறையவில்லை என்பதையும் மாணவர் சமுதாயம் ஓர்மத்துடன் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேநேரம், ராஜபக்ச தரப்பு அவமானகரமானதாகக் கருதும் இந்தத் தோல்வி, இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் அவர்களுக்கு ஒரு பின்னடைவாக அமையலாம்.
சர்வதேச அளவில் தமக்கான தடைகள் இல்லை என்று விளக்கி சிங்கள மக்கள் மத்தியில் 2029 ஜனாதிபதிக் கனவிற்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது இதனால் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு மக்னிட்ஸ்கி சட்டத்தின் (Magnitsky Act) கீழ் பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறலாம்.

ஏற்கனவே ஜெனரல் சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) போன்றோருக்கு விதிக்கப்பட்ட தடைகளைப் போல நாமல் ராஜபக்சவிற்கும் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
அப்படியாகத் தடைகள் விதிக்கப்படும் பட்சத்தில் பிரித்தானிய எல்லைக்குள் இருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் முடக்கப்படலாம், இது நாமல் ராஜபக்சவிற்கு ஒரு பேரிழப்பாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுருக்கமாகக் கூறின், நாமல் ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் அவர் எதிர்பார்த்த இராஜதந்திர அங்கீகாரத்திற்குப் பதிலாக சர்வதேச அளவில் ராஜபக்ச குடும்பம் சந்திக்கும் அரசியல் தனிமைப்படுத்தலை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாடுகளில் வலுவான ஒரு தளத்தை அமைத்து சக்திமிக்க கட்டமைப்பாக மாறியிருக்கிறது என்ற செய்தியைத் தாயகத் தமிழர்களுக்கும் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கும் சிங்கள மேலாதிக்கத்திற்கும் இச்சம்பவம் உரக்கச் சொல்லியிருக்கிறது
No comments: