ஈரானில் அரச மாளிகை, இராணுவ புலனாய்வு அலுவலகம் உள்ளிட்ட பல இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்!
ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் இன்று (28) திறந்த மோதலாக வெடித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த நடவடிக்கை “The Shield of Judah” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த கூட்டு ராணுவ நடவடிக்கை (Joint Military Operation) என விவரிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வரை ஈரானில் 30 முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிகாரிகள் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாவது, இது “சிறிய அளவிலான தாக்குதல் அல்ல” என்றும், ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கி நடத்தப்படும் விரிவான இராணுவ நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் “உடனடி அவசர நிலை” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் வான்வெளிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்க “முன்னெச்சரிக்கை தாக்குதல்” (Pre-emptive strike) மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா தனது இராணுவப்படைகளை மத்திய கிழக்கில் குவித்து வந்த நிலையில், இந்த நேரடி தலையீடு முழு அளவிலான போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், மத்திய கிழக்கில் முழு அளவிலான போர், சர்வதேச எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பாதுகாப்பு பதற்றம் என்பன அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்
2/28/2026 02:26:00 PM
Home
/
Unlabelled
/
ஈரானில் அரச மாளிகை, இராணுவ புலனாய்வு அலுவலகம் உள்ளிட்ட பல இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்!
ஈரானில் அரச மாளிகை, இராணுவ புலனாய்வு அலுவலகம் உள்ளிட்ட பல இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: