News Just In

2/25/2026 03:51:00 PM

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல முன்மொழிவுகள் முன்வைப்பு

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல முன்மொழிவுகள் முன்வைப்பு


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24) அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் அவர்களினால் கல்வி, வீதி, வடிகால், வெள்ளப் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 35 முக்கிய அபிவிருத்தி முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

பாலமுனை 01 முதல் 06 வரை பல்வேறு பிரிவுகளில் உள்ளக வீதிகள் புனரமைத்தல், கொங்கிரீட் மற்றும் கார்பட் வீதிகள் அமைத்தல், வடிகால் அமைப்புகள் நிர்மாணித்தல், கல்வெட்டுகள் அமைத்தல், கடற்கரை பிரதான வீதி மற்றும் பாலங்கள் புதுப்பித்தல், வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி, ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரி, தாறுல் ஹஸனாத் வித்தியாலயம், ஹிக்மா வித்தியாலயம், அல் ஹிதாயா மகளிர் கல்லூரி, மின்ஹாஜ் மகா வித்தியாலயம், இப்னு ஸீனா கனிஸ்ட வித்தியாலயம், திராய்க்கேணி GMMT வித்தியாலயம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு தளபாட உதவி, சுற்று மதில் நிர்மாணம், வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆராதனை மண்டபங்கள் அமைத்தல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் மழைநீர் தேக்கம் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், கரையோர வாய்க்கால்களை துப்புரவு செய்து மழைநீர் வடிந்தோடச் செய்வதற்கும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பொதுச்சந்தை மற்றும் மதஸ்தலங்களை அழகுபடுத்துதல், SLT கட்டைகளை இடமாற்றுதல் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளும் முன்மொழியப்பட்டன.

மேற்கண்ட முன்மொழிவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, அவற்றை கட்டம் கட்டமாக செயல்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments: