பெப்ரவரி4ஆம் திகதி எம் மக்களுக்கு ஓர் கரிநாளாகவே காணப்படுகின்றது..!நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 03.02.2026. சாணக்கியன்
உண்மையில், இன்றைய இந்தப் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் வேளையில், முழுவதும் அரசால் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆயத்தங்கள் நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம்.
எங்களுக்குச் சுதந்திரம் இல்லாத நிலையில், 77, 78 என ஆண்டுகளை எண்ணிக் கொண்டாடுவதற்கு எங்களுக்குத் தேவையில்லை. 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலவிதமான நிகழ்வுகள், விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திலும் சுதந்திர நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அழைப்புகள் எங்களுக்கு வழங்கப்பட்டது , அதேபோல் கொழும்பிலும் நடைபெறவுள்ள சுதந்திர விழாக்களில் பங்கேற்குமாறு பலமுறை தொலைபேசி அழைப்புகள் வந்தது .
ஆனால், எங்களுடைய மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படாத நிலையில், இந்த நாட்டில் சுதந்திரத்தை கொண்டாட முயற்சிப்பது எங்களுக்குப் பொறுத்தவரை ஒரு வேதனையான, விரோதமான உணர்வையே ஏற்படுத்துகிறது.
இன்று நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், பெப்ரவரி 4ஆம் திகதி “கரிநாள்” என அறிவிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாட்டில் பல எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், எங்களுடைய தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் தொடர்ந்து சுதந்திர விழாக்களை நடத்திக்கொண்டே செல்லும் அரசியல் நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கூட, தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது மறக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட் ட விடயமாகவே உள்ளது. தொடர்ச்சியாக எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன உரிமைகள் மறுக்கப்படுகின்றது. 48 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நில அபகரிப்பு நடவடிக்கைகள், இன்றும் சுதந்திர தினம் பற்றி பேசப்படும் காலத்திலும் தொடர்கின்றன.
இன்று காலை கூட, ஜனாதிபதி அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், எமது அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தில், இந்த அவையில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுக்கு அது மிகுந்த அவமானமாகவே உணரப்படுகிறது. ஏனெனில், தேர்தல் பிரச்சார காலத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று தெளிவாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்ட நிலையில், அரசியல் கைதிகள் யார் என்றே கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவோம் என்று கூறியவர்கள், இன்று அதற்குப் பதிலாக புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நேற்றைய தினம் கூட, வவுனியா வடக்கின் நெடுங்கேணி பகுதியில், எங்களுடைய மண்ணைப் பாதுகாப்பதற்காக ஒரு பாரிய மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்றது. நீங்கள் “சுதந்திரம் கிடைத்தது” என்று கூறும் அதே நாளிலிருந்து, தமிழ் மக்களுக்கு தங்களுடைய நிலங்களை பாதுகாப்பதே பிரதான கடமையாகி விட்டது.
மணலாறு (பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்ட) போன்ற பகுதிகளில், தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களில் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் வழங்கல் என்ற பெயரில், வவுனியாவின் சிறுகுளங்கள் அழிக்கப்பட்டு, வவுனியா வடக்கிலிருந்து நீர் மாற்றப்பட்டு, பெரும்பான்மை சமூகத்தின் குடியேற்றங்களை வளர்ப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இது சமத்துவமா? வவுனியாவில் உள்ள தமிழ் விவசாயிகள் ஒரு போகமும் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்க, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த 4000 பேருக்கு இரண்டு போகங்கள் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுகிறது. இதுவே கடந்த காலங்களிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான ஏமாற்றங்களின் எடுத்துக்காட்டாகும்.அதே நடைமுறைகளும், அதே துரோகம் செய்த செயல்களும் இன்றைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்றன. மகாவலி திட்டங்கள் என்ற பெயரில், மட்டக்களப்பு, வட மத்திய மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட முயற்சிக்கப்பட்டுள்ளன.
76, 77 ஆண்டுகளாக “சுதந்திரம்” என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. எங்களுடைய மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் இல்லை.
அதனால், பெப்ரவரி 4ஆம் திகதி எங்களுக்குப் பொறுத்தவரை ஒரு சுதந்திர தினமாக அல்ல; ஒரு கரிநாளாகவே அமையும்
No comments: