முன்னாள் அமைச்சர், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை, சில பிரதிநிதிகளின் அசமந்த போக்கும் அரசியல் அலட்சியமும் காரணமாக அம்பாறைக்கு மாற்றப்பட்டமை கரையோரப் பிரதேச மக்களுக்கு பெரும் அநீதியாக அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
இந்த பணியகம் கல்முனையில் இயங்கிய காலப்பகுதியில், பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், காரைதீவு, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும் எளிதாகவும் சேவைகளைப் பெற்றிருந்தனர். எனினும், தற்போது இந்த அலுவலகம் அம்பாறையில் இயங்கி வருவதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பதிவு, புதுப்பிப்பு, பயிற்சி, முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக மக்கள் பல கிலோமீட்டர்கள் தூரம் பயணிக்க வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, வெளிநாட்டிற்கு செல்ல முனையும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள், அம்பாறைக்கு சென்று வருவதற்காக பல ஆயிரம் ரூபாய்களை போக்குவரத்து செலவாகச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அவர்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் அவர்களின் எதிர்கால கனவுகளுக்கே தடையாக அமைந்து வருகிறது.
இதனைவிடக் கடுமையான பிரச்சினையாக, மொழிப் பிரச்சினை விளங்குகிறது. கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அம்பாறையில் இயங்கும் பணியகத்தில் மொழி தொடர்பான சிக்கல்கள் காரணமாக, தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் ஆவணங்களை சரியாக எடுத்துரைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது சேவைகளின் தரத்தையும், மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
எனவே, கரையோரப் பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கான கிளையொன்றை உடனடியாக அம்பாறை கரையோர பிரதேசமொன்றில் அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி, மக்கள் சார்பாக அரசை வலியுறுத்துகிறது. இது வெறும் நிர்வாகத் தீர்மானமாக அல்லாமல், சமூக நீதி, மொழி உரிமை மற்றும் பிராந்திய சமத்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.
அரசு இந்த நியாயமான கோரிக்கையை இனியும் புறக்கணிக்காமல், கரையோர மக்களின் நீண்டகால வேதனையை உணர்ந்து, உடனடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றார்
No comments: