தமிழ்த் தேசிய அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவப் போர், தற்போது வெறும் அதிகார மோதலாக மட்டுமன்றி, கட்சியின் அடிப்படை அடையாளத்தையே மாற்றியமைக்கும் ஒரு மதமாற்ற வியூகமாக உருவெடுத்துள்ளதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு கருத்து தமிழ் அரசியல் பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
குறித்த விடயத்தை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், தமிழரசுக் கட்சியை ஒரு கிருஸ்தவப் பாதிரியார்களுடைய சபையாக மாற்றியமைக்கும் தீய நோக்கம் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு இருப்பதாகவும், அதன் ஒரு அங்கமாகவே கட்சியின் நீண்டகாலத் தூண்களாக விளங்கும் பலமான தலைவர்களை அவர் திட்டமிட்டு ஓரங்கட்டுவதாகவும் சச்சிதானந்தன் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீக்குவதற்கான அண்மைய அறிவிப்பானது, ஒழுக்காற்று நடவடிக்கை என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் ஒரு அரசியல் துடைப்பணி என்ற ரீதியில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கட்சியின் கட்டுக்கோப்பைச் சிதைக்காமல் பேணவே சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சுமந்திரன் தரப்பு நியாயப்படுத்தினாலும், இது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே உள்ள நம்பிக்கையைச் சிதைத்து, ஒரு குறிப்பிட்ட உயரடுக்கு அதிகார வர்க்கத்தின் கைகளில் கட்சியைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது என்ற ரீதியில் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஓரங்கட்டிவிட்டு, தனது நிழல் அதிகாரத்திற்குத் தலைவணங்கக்கூடிய ஒரு புதிய விசுவாசப் பட்டாளத்தை கட்சியின் முன்னிலைத்தலைவர்களாக நிலைநிறுத்தச் சுமந்திரன் காய்நகர்த்துகிறாரா என்ற கேள்வியும் மக்களிடையே இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தநிலையில், சிறீதரன் மீதான இந்தப் பதவி பறிப்பு அறிவிப்பு, வெறும் உட்கட்சி விவகாரமா? அல்லது மறவன்புலவு சச்சிதானந்தன் எச்சரிப்பது போல ஒரு நீண்டகாலச் சித்தாந்த மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியா? என்பது குறித்த பலமான தர்க்கங்கள் இப்போது மேலெழுந்துள்ளன.
No comments: