அமைதி வழங்கும் அமைப்பாக ஐ.நா. சபையை மக்கள் கருதவில்லை: இந்தியாவின் நிரந்தர தூதர் விமர்சனம்

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பாக ஐ.நா.வை உலக மக்கள் கருதுவதில்லை என்று இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் விமர்சித்துள்ளார்.
ஐ.நா.வில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். அத்துடன், ஐ.நா.வுக்கு மாற்றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் உறுப்பினராக இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் ட்ரம்ப்பின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில், அர்ஜென்டினா, அர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பல்கேரியா, ஹங்கேரி, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசாவோ, மங்கோலியா, மொராக்கோ, பாகிஸ்தான், பராகுவே, கத்தார், சவுதி, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. ஆனால், இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அதில் சேரவில்லை.
இந்நிலையில், ஐ.நா.வின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைப்பின் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள புவி அரசியல் சவால்களில் துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஐ.நா. செயல்படவில்லை.
அதற்கு நிகராக பிற விவாதங்களும், நடவடிக்கைகளும் வேறு சிலரால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக நாடுகளிடம் அமைதி, பாதுகாப்புக்கு ஏற்ற அமைப்பாக ஐ.நா.வை உலக மக்கள் கருதவில்லை. சர்வதேச சட்டதிட்டங்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இதில் எந்த நாடும் இரட்டை வேடம் போடக் கூடாது.
அதேநேரம் சர்வதேச சட்டதிட்டங்கள் என்பது, ஒரு நாட்டின் இறையாண்மையை தாக்குவதற்கோ, உள்நாட்டின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கோ அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments: