News Just In

1/05/2026 08:38:00 AM

திஸ்ஸ விகாரையை இடித்தழிக்க இடமளியோம்! காணிகளையும் விடுவிக்க முடியாது - மொட்டுக் கட்சி சண்டித்தனம்

திஸ்ஸ விகாரையை இடித்தழிக்க இடமளியோம்! காணிகளையும் விடுவிக்க முடியாது - மொட்டுக் கட்சி சண்டித்தனம்



யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற ஒருபோதும் இடமளியோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அதேவேளை, திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகள் விகாரைக்குச் சொந்தமானவை என்றும், அந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் விகாரை அமைந்துள்ள காணியைத் தவிர ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று காணி உரிமையாளர்களுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின்போது யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் உறுதியளித்திருந்தார்.

எனினும், இது தங்கள் போராட்டத்தை மலினப்படுத்தித் தங்களை ஏமாற்றும் அரசின் திட்டம் என்றும், காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நேற்றுமுன்தினம் தையிட்டியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அதேவேளை, மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதில் எதற்காககே கட்டம் கட்டமான நடவடிக்கை இடம்பெற வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்த நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட மிகச் சிறிய பகுதியை எடுத்துக்கொண்டு ஏனைய பகுதிகள் அனைத்தும் ஒரே தடவையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்பது தமிழ் மக்களுக்கும், தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? தையிட்டி திஸ்ஸ விகாரையில் எவரும் கைவைக்க முடியாது. அதை அகற்ற ஒருபோதும் இடமளியோம். திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகள் விகாரைக்குச் சொந்தமானவை. அந்தக் காணிகளை அரசு விடுவிக்கக்கூடாது.

அதேவேளை, தையிட்டி விகாரை விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள விகாராதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அவர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்." - என்றார்.

No comments: