News Just In

1/05/2026 08:36:00 AM

தையிட்டி ஆர்ப்பாட்ட வழக்கு: வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்காக நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் சுமந்திரன்!

தையிட்டி ஆர்ப்பாட்ட வழக்கு: வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்காக நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் சுமந்திரன்!



தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் இப்போது மேலதிகமாக அழைப்பாணை அனுப்பி அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்குமாக இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகின்றார்.

சூடான வாதப் பிரதிவாதம் இன்று நீதிமன்றத்தில் கட்டவிழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மதத் தலைவரான வேலன் சுவாமியைப் பொலிஸார் கையாண்ட விதம், அவருக்கு எதிராகப் பொலிஸாரால் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் போன்றவை இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபை பிரதேசம் ஒன்றில் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கட்டப்படும் கட்டமைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டி, அது பற்றி அறிவிக்கும் அதிகாரம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பிரதேச சபைத் தலைவரோ, செயலாளரோ பிரயோகிப்பர்.

அப்படி இருக்கையில் சட்டவிரோதக் கட்டுமானமானத் தையிட்டி விகாரையின் பக்கத்தில் அத்தகைய சட்டவிரோத கட்டுமானம் பற்றிய அறிவித்தலை பிரதேச சபை நடுமானால் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தில் பொலிஸார் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளருக்குக் கொடுத்துள்ள 'மிரட்டல்' அறிவித்தல் இன்று நீதிமன்ற விசாரணையின் போது சில சமயங்களில் மன்றின் கவனத்துக்கு எடுக்கப்படும் வாய்ப்பு உண்டு.

அது பற்றி தெளிவான அறிவுறுத்தல் ஒன்றை - சட்ட வியாக்கியானம் அல்லது விளக்கத்தை - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இன்று பொலிஸாருக்கு நீதிமன்ற முகதாவில் வழங்குவார் என்றும் எதிர்பார்க்க முடியும்

No comments: