News Just In

1/02/2026 10:10:00 AM

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பின்னணி

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பின்னணி



சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 200 பேர்கள் உயிர் தப்ப முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக

நாட்டை உலுக்கிய அந்த கோர சம்பவத்தில் டசின் கணக்கானோர் மரணமடைந்துள்ள நிலையில், சுமார் 115 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதில் பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலைஸ் மாகாணக் காவல்துறைத் தலைவர் ஃபிரடெரிக் கிஸ்லர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில், சம்பவம் நடந்த மதுபான விடுதியில் 40 பேர்கள் வரையில் மரணமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி Guy Parmelin தெரிவிக்கையில், இந்தத் தீ விபத்து சுவிட்சர்லாந்தின் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார் 


மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், இத்தகைய சோகம் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், ஷாம்பெயின் போத்தல்களில் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஏற்றியதே இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களில் பலர் பதின்ம வயதுடையவர்கள். விபத்தை அடுத்து, குறுகலான படிக்கட்டு வழியாக மக்கள் தப்பிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பற்றியும் பெண் ஒருவர் விவரித்துள்ளார்.

30 நொடிக்குள் சுமார் 200 பேர்கள் அங்கிருந்து உயிர் தப்ப முயன்றதையும் நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பெரும்பாலானோர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வாலைஸ் மாகாணத்தின் அரசு சட்டத்தரணி பீட்ரைஸ் பில்லூட் தெரிவிக்கையில், ஷாம்பெயின் போத்தல்களில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்தான் இந்தத் தீவிபத்திற்குக் காரணம் என்ற செய்திகள் குறித்துத் தன்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும்,



விசாரணை நடைபெற்று வருகிறது. நடந்த சம்பவத்தின் உண்மையான பின்னணிகளை அது கண்டறியும் என்றும் கூறியுள்ளார். மாகாணக் காவல்துறைத் தலைவர் ஃபிரடெரிக் கிஸ்லர் தெரிவிக்கையில்,

அவசர அழைப்புகள் கிடைக்கப்பெற்ற 2 நிமிடங்களில், அதாவது 1.32 மணிக்கு சம்பவயிடத்திற்கு சென்றதாகவும், உடனடியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், 42 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 12 ஹெலிகொப்டர்களை சம்பவயிடத்திற்கு வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.



பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பது போன்ற துயரமான பணியை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வியாழக்கிழமை மாலை, உறைபனி குளிரிலும் நூற்றுக்கணக்கானோர் அமைதியாகக் கூடி, மலர்களை வைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

No comments: