News Just In

12/07/2025 09:19:00 AM

நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை !

நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்

ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானத்தை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மீறி செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ. இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தயாராக இருக்கிறது. இவரது தான்தோன்றித்தனமான செயலுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிந்தவூர் மக்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அதிக ஆசனங்களை கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு நிந்தவூர் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சமீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாக நிந்தவூர் தவிசாளர் தெரிவில் இழுபறி நிலை தொடர்ந்த போது சபை அமர்வில் பார்வையாளராக கலந்து கொள்ள வருகைதந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது எங்கள் பங்காளி கட்சிகளில் அம்பாறை மாவட்டத்தில் யார் அதிகம் ஆசனங்களை கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சி அமைக்க நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தோம். அதனை தொடர்ந்து எங்களின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி இர்பான் அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்குமாறு கட்சி பணிப்பு விடுத்தது. தான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதாக கூறி சபைக்கு வந்து ஆட்சியமைக்கும் போது அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளித்தார்.

முன்னாள் தவிசாளருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் விளைவாக வெற்றிடமான தவிசாளர் பதவிக்கான தெரிவின் போதும் இரண்டாவது தடவையாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்க அவரை வேண்டியது. ஆனால் அவர் அந்த அமர்வுக்கு சமூகமளிக்காமல் இருந்ததால் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது தடவையாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்க அவரை கட்சி பணித்து எழுத்துமூலம் அறிவித்தல் கொடுத்து நானும் அவரை சந்தித்து பேசினேன்.

இன்று சபைக்கு சமூகமளித்து கட்சியின் அறிவுறுத்தல்படி ஆதரவளிப்பதாக என்னிடமும் வாக்குறுதி அளித்து விட்டு இன்றும் அவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. கட்சி தீர்மானத்தை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மீறி செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்

No comments: