டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலைத் தாக்கத்தின் காரணமாக நாளாந்த சீவியம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுப்போன நிலையில் இதுவரை எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறாத கிராம மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் யுனொப்ஸ் விருத்தி United Nations Office for Project Services நிதி அனுசரணையில் சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப்போய், நலிவுற்ற நிலையிலுள்ள குடும்பங்களுக்கு இந்த உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருவதாக சேர்க்கிள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் கிராம அலுவலர் பகுதிக்குட்பட்ட காரைக்காடு, மாவடியோடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, தினக்கூலிகள், நன்னீர் மீன்பிடியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 80 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த இடர் நிவாரணப் பொதியில் தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, நெத்தலிக் கருவாடு, ரின் மீன், பருப்பு, தேயிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கியுள்ளன.
பயனாளிக் குடும்பங்கள் உட்பட ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர் முஹம்மத் றுசைத், கிராம அலுவலர் ரீ. நிந்துஜன், பிரதேச இராணுவ முகாம் கோப்ரல்களான டி.எல். வீரசிங்ஹ, கே.எம்.எல். விஜேதுங்க, டி.எம். திஸாநாயக்க, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவி ரீ. திலகவதி, விவசாய அமைப்பு சங்கத் தலைவி ரீ. அழகுசௌந்தரி ஆகியோர் முன்னிலையில் இந்த இடர் நிவாரண விநியோகம் பகிர்ந்தளிக்கப்பட்டது
சேர்க்கிள் நிறுவன வெளிக்கள இணைப்பாளர்களான கே. ஜெயவாணி, கே. லக்ஷானா ஆகியோரும் நிகழ்வில் பங்கு பற்றினர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப்போயுள்ள தங்களுக்கு தக்க தருணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த உலருணவுப் பொருட்கள் தமக்கு ஆறுதளிப்பவை என உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தெரிவித்தனர்.
No comments: