News Just In

12/26/2025 08:54:00 PM

மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் புலமைப்பரிசில்கள் குறித்து இந்திய உயஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடல் !

மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் புலமைப்பரிசில்கள் குறித்து இந்திய உயஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடல் !



நூருல் ஹுதா உமர்

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயஸ்தானிகராலயத்தில், இந்திய உயஸ்தானிகராலய கல்வி பிரிவுக்கான செயலாளர் சந்திப் சௌத்திரியை நளீர் பௌண்டஷன் தலைவர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான எம்.ஏ. நளீர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும், குறிப்பாக உயர்கல்வி வாய்ப்புகள், புலமைப்பரிசில்கள் வழங்கல், கல்வி பரிமாற்ற திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வி துறையில் இந்திய அரசாங்கம் வழங்கி வரும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நளீர் பௌண்டஷன் ஊடாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து எம்.ஏ. நளீர் விளக்கமளித்ததுடன், இந்திய உயஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு மேலும் பல கல்வி வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சந்திப் சௌத்திரி, இலங்கை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இந்திய உயஸ்தானிகராலயம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் எனக் குறிப்பிட்டதுடன், இரு தரப்பினருக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தயார்நிலையையும் வெளிப்படுத்தினார்.

இந்த சந்திப்பு, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

No comments: