- அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் கண்டனம்
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று மாநகரசபை பல கட்சிகளை உள்ளடக்கிய ஒரு சபை. குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டு, அதன் பயனாக உதவிகள் மக்களுக்காக வழங்கப்பட்டன. அக்கரைப்பற்று மாநகர முதல்வர் பல சந்தர்ப்பங்களில் இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை என்பதைக் பல நேர்காணலில் கூட கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில், இந்த உதவியை ஓர் குறிப்பிட்ட கட்சியினர் தங்களுக்கே உரிமை கோருவது எந்த வகையிலும் நியாயமல்ல என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் சபூர் ஆதம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அக்கரைப்பற்று மாநகர சபை கட்சி பேதம் இன்றி ஒருமித்த தீர்மானத்தை எடுத்து, மாநகரசபையின் ஆளணி மற்றும் இயந்திரங்களை கண்டி – கம்பளை நகருக்கு அனுப்பியது. இந்தப் பயணம் முழுமையாக மனிதாபிமான அடிப்படையிலேயே, எந்தவித கட்சி அரசியலுமின்றி இடம்பெற்றது.
குறிப்பாக, கம்பளை நகரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடைய பிரதேசம் என்பதனால், அங்கு சென்ற போது அவர்களால் வழங்கப்பட்ட வரவேற்பை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவது நாகரிகமற்ற செயல். இது முஸ்லிம் காங்கிரஸிக்கான உதவியல்ல; அக்கரைப்பற்று மாநகரசபை கம்பளை மக்களுக்காக நீட்டிய மனிதாபிமான உதவிக் கரம். இந்த நடவடிக்கையை வைத்து, முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய தளர்ந்து போன அரசியல் இருப்பை மீளக் கட்டமைக்க முயல்வது அநாகரிகமானதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்.
மேலும், இதனை முகநூல் போன்ற பொதுவெளிகளில் பதிவிட்டு, ஏனைய கட்சியினரின் வெறுப்பையும் விரக்தியையும் சம்பாதிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை உறுப்பினர்கள் நடந்து கொள்வது, அக்கரைப்பற்று மாநகரசபை மீது முழு நாட்டளவில் உருவாகியுள்ள நல்ல அபிப்பிராயத்தையே பாதிக்கும்.
நாம் அனைவரும் – குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் – பொதுவெளியில் அதிக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய கடமை உடையவர்கள்.
அனர்த்த நேரங்களில் அரசியல் அல்ல, மனிதாபிமானமே முதன்மை என்பதை மறக்கக்கூடாது. அத்தோடு, “நாங்கள்தான் நாளைய தலைவர்கள்” என்று பேசுவதற்கு முன், தலைவர்களுக்குரிய பண்புகள் எம்மிடம் உள்ளனவா என்பதை ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்க வேண்டும். கல்வியறிவும், பண்பும், ஈமானிய உணர்வும் கொண்ட அக்கரைப்பற்று மக்களை வழிநடத்த விரும்புபவர்கள், அதற்கேற்ற தகுதியையும் பொறுப்புணர்வையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் ஒரு போதும் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்த்துள்ளார்.
-
No comments: