News Just In

12/21/2025 08:13:00 PM

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு




க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது.

அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள்.

நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர்.

No comments: