News Just In

12/15/2025 10:09:00 AM

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் பயங்கரம்: தீவிரவாத தாக்குதலில் 11 யூதர்கள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் பயங்கரம்: தீவிரவாத தாக்குதலில் 11 யூதர்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரை மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். படம்: பிடிஐ

 ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை மறுஅர்ப்பணம் செய்ததைக் குறிக்கும் வகையில், ‘ஹனுக்கா’ திருவிழாவை யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், ஒரு வாரம் நடைபெறும் ஹனுக்கா திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், மாலை 6.40 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். போலீஸார் விரைந்து சென்று, மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் பிடிபட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நியூ சவுத்வேல்ஸ் காவல்துறை உயர் அதிகாரி கிறிஸ் மின்ஸ் கூறும்போது, ‘‘இது பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். யூதர்களை குறிவைத்து நடந்த இந்த தாக்குதலில் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் (24) என்று தெரியவந்துள்ளது. வேறு யாராவது இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையே, கடற்கரையில் உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அங்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பிய ஒருவர், ஹனுக்கா திருவிழாவை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். நேற்றைய தாக்குதலில் அவரும் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments: