வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் :ஜனாதிபதி அநுர உறுதி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக புதிய அணுகுமுறைக்கு அமைய, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் "தமக்கெனதோர் இல்லம் - அழகான வாழ்க்கை" வீட்டுவசதி நிகழ்ச்சி திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் மொறட்டுவை, பேலியகொடை, தெமட்டகொடை, மகரகம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகளுக்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட பழைய அடுக்குமாடி வீடமைப்பு கட்டட தொகுதியை புனரமைப்பதற்கு 1,180 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
No comments: