News Just In

11/27/2025 11:49:00 AM

வெள்ள நீர் வழிந்தோடும் இடங்களுக்கு அலையலையாக மக்கள் வருகை – நிபுணர்கள் உயிராபத்தை எச்சரிக்கை செய்கிறார்கள் !

வெள்ள நீர் வழிந்தோடும் இடங்களுக்கு அலையலையாக மக்கள் வருகை – நிபுணர்கள் உயிராபத்தை எச்சரிக்கை செய்கிறார்கள் !


நூருல் ஹுதா உமர்

நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக திரள்வது அதிகாரிகளின் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாவடிப்பள்ளி மற்றும் கிட்டங்கி போன்ற பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக சரிந்து விடாத நிலையில், நதிக்கரைகள், பாலத்தடைகள், ஆறு கரைகள் போன்ற இடங்களுக்கு மக்கள் மிக அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், வெள்ளநீர் வடிந்தோடும் இத்தகைய இடங்களின் அடிப்பகுதியில் ஆழ்ந்த பள்ளங்கள் உருவாகியிருக்கலாம், மணல்வரடு தளர்ந்திருக்கலாம், திடீர் நீரோட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சிலர் குடும்ப சகிதம் வாகனங்களுடன் வெள்ளப்பாதைகளுக்கு நெருக்கமாக செல்வதும், ஆற்றங்கரையில் நிற்கும் பாதைகளில் தங்குவதும் சறுக்கி விழும் அபாயத்தை அதிகரிக்கிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும் முயற்சியால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது அபாயத்தை ஏற்படுத்தும் செயல் என பாதுகாப்பு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் சுற்றுலா பயணிகள் போல படையெடுத்து வருகிறார்கள்.

வெள்ள நீர் வழிந்தோடும் எந்தப் பகுதியிலும் தேவையற்றுச் செல்ல வேண்டாம் என்றும் ஆறு/ஏரி கரைகள், உடைந்த தடைகள், பாலங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை இத்தகைய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இருக்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பொதுமக்கள் தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுமாறு மக்களை பாதுகாப்பு படை கேட்டுக்கொண்டுள்ளது

No comments: