
இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மோடி, வெடிப்பில் உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டு, காவல்துறைத் தலைவர்களைச் சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, அமித் ஷா உடனடியாக பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வெடிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இது பயங்கரவாதிகளின் கொடூரமான தாக்குதலாக இருக்கலாம் என்று இந்திய பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
புது டெல்லி கார் வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியின் எல்லையை ஒட்டியுள்ள வடக்கு மாநிலமான ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து 2,500 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்திய காவல்துறையினருக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவர்
அத்தோடு, சம்பந்தப்பட்ட வாடகை வீட்டில் தங்கியிருந்த நபர் ஜம்மு கஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த வைத்தியருமான முஜம்மில் ஷகீல் என்ற தகவலை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுதியுள்ளனர்.
அவர் பாகிஸ்தானை ஆதரிக்கும் பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராகவும் சந்தேகிக்கப்படுகிறார்.
இந்த நிலையில், குறித்த சோதனையின் போது முஜம்மில் ஷகில் உட்பட மற்றொரு வைத்தியரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் சோதனை மற்றும் அது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது டெல்லியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: