
தமிழத்தில் வரும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை, தனித்துதான் போட்டி என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்கமாட்டேன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முதன்மை நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் எங்களுக்கென்று சிறப்பு உத்தி எல்லாம் எதுவும் கிடையாது. அரசியலை வியாபாரம் ஆக்கக்கூடாது. ஆனால் வாக்குக்கு காசு கொடுக்கும் முறையை, தேர்தல் ஆணையமும் பொருட்படுத்துவதே இல்லை.
தேர்தல் ஆணையம் அமைக்கும் பறக்கும் படை, வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிக்காரர்களை பிடிப்பதில்லை. மாறாக, மளிகைக்கடைக்குச் செல்வோரையும், மருத்துவமனைக்கு பணம் கொண்டு செல்வோரையுமே பிடிக்கிறது.மக்களவைத் தேர்தலுக்கு ரூ.50 கோடியும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.15 முதல் 20 கோடி ரூபாயும் செலவு செய்து வெற்றி பெறும் ஒருவர், போட்ட பணத்தை எடுக்கும் நோக்கில்தானே செயல்படுவார். வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய கட்சிகள் தொடங்குபவர்கள், ஏற்கெனவே உள்ள கட்சிகளின் கொள்கைகள் பிடிக்காமல் தான் மாற்று என்று வருகிறார்கள். ஆனால் அதன் பிறகு, அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்கின்றனர்.
மது ஒழிப்பு மாநாடு நடத்திய விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் ஆளுங்கட்சியுடனே கூட்டணி வைத்துக்கொண்டால் அந்த மாநாட்டின் பயன் என்ன? நாங்கள் கூட்டணிக்கு காத்திருப்பதில்லை. 10.5 சதவீத வாக்குகளை வைத்திருந்த மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி வைத்ததால் என்ன ஆனது என்பதை அனைவரும் பார்த்தோம். எனவே, எக்காரணம் கொண்டும் அந்த தவறை நான் செய்யமாட்டேன். தனித்து தான் போட்டி. 1.1 சதவீதத்தில் இருந்து 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். 36 லட்சம் பேர் பணம் வாங்காமல் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments: