News Just In

11/13/2025 05:53:00 PM

மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி காரைதீவு பிரதேச சபை!

மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி காரைதீவு பிரதேச சபை அமர்வு கூடியது : மக்களின் பிரச்சினைகள் பலதும் ஆராய்வு !



நூருல் ஹுதா உமர்

இலங்கையின் முக்கிய மீன் சந்தையையும், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தையும், பள்ளிவாசல்கள் மேலும் பல கேந்திர இடங்களையும் கொண்டுள்ள மாளிகா வீதி முடிவில் வடிகான்கள் அடைப்பு எடுத்துள்ளதால் நீர் வடிந்தோட இடமின்றி நீர்தேங்கி நிற்பதால் பல்வேறு இன்னல்கள் உருவாகி அப்பிரதேச மக்களுக்கு நோய்நிலைகளும், அசௌகரியங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியும் பலனில்லை. மனிதாபிமானமான அடிப்படையில் மாணவர்களினதும், மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் நன்மை கருதி காரைதீவு பிரதேச சபை உடனடி தீர்வை வழங்க முன்வரவேண்டும் என காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் இன்று பிரதேச சபை அமர்வில் வலியுறுத்தினர்.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 05வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று 13/11/2025 வியாழக்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் மாளிகைக்காடு மையவாடியை சீரமைக்க பிரதேச சபை தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டிய அவசியத்தை முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி முன்வைத்துள்ள பாதீட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை கொண்டு நீண்டகாலமாக அபிவிருத்தி காணாத தமிழ், முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இந்த பாதீட்டின் மூலம் சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். மேலும் ஊழல் மற்றும் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வரவேற்கக்கூடியதாக உள்ளதாக தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தனது உரையில் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் தமது வட்டாரத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தமக்கு தெரியாமல் நடைபெறுவதாகவும், அமுலில் உள்ள சபையின் உபகுழுக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமாரவின் ஊழல் ஒழிப்பு, போதையொழிப்பு செயற்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், சபையை வெளிப்படை தன்மையுடன் வழிநடத்துமாறும் வேண்டினார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் யோகரெத்தினம் கோபிகாந்த், போகின்ற போக்கை பார்க்கும் போது அடுத்தவருட நடுவில் சபை நிதி நிலைகளை சமாளிக்க முடியாத வாங்கறோத்து நிலை வரும். ஆதலால் சிறப்பான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டியுள்ளதை வலியுறுத்தி, மேலதிக ஆளணியினரை உள்ளுராட்சி திணைக்களத்தில் இணைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அடுத்த சபைக் கூட்டத்தில் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால் அதனை பரிசீலனை செய்து ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் முன்மொழிவுகளை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க தவிசாளர் உறுப்பினர்களை வேண்டிக்கொண்டதுடன் காரைதீவு மயானத்தில் தகன சாலை ஒன்றை அமைப்பதற்கு நன்கொடையாளர் ஒருவர் முன்வந்துள்ளமையினால் துறை சார் திணைக்களங்களின் இணக்கப்பாட்டுடன் தகனசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டு சபை அனுமதி வழங்கியது.

கலாசார மண்டப தேவைகள், 43 அலுவலக ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு வழங்கும் பணி, அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சபை நிதியிலிருந்தும் உதவி வழங்க அனுமதி,
இராணுவத்திடமிருந்து கையளிக்கப்பட்ட காணியில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு பாவனைக்கு விடுவதற்கு சபை அனுமதி பெறல் போன்ற பல விடயங்களுக்கு சபை அனுமதி வழங்கியது.

கி. ஜெயசிறில், எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.எம். ஜாஹீர், யோ.கோபிகாந்த் போன்ற உறுப்பினர்களினால் தெருமின்விளக்கு சீரமைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சபை அமர்வின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

No comments: