News Just In

11/26/2025 07:34:00 PM

கடந்த 130 ஆண்டுகளில் இலங்கைக்கு நெருக்கமாக ஆபத்தான தாழமுக்கம்: தொடரவுள்ள வானிலை மாற்றம்

கடந்த 130 ஆண்டுகளில் இலங்கைக்கு நெருக்கமாக ஆபத்தான தாழமுக்கம்: தொடரவுள்ள வானிலை மாற்றம்



"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன.

இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பகுதி ஊடாகவும், பின்னர் இலங்கையின் கிழக்குக் கரைப்பகுதி ஊடாகவும் நகரவுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதியளவிலேயே அந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு மாகாணத்தில் இருந்து நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்துடன் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது." என்றார்

No comments: