News Just In

8/03/2025 05:47:00 PM

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் : சட்ட சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடினார் !

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் : சட்ட சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடினார் !


நூருல் ஹுதா உமர்

கல்முனை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் கல்முனை விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள 03 மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடனும் கலந்துரையாடி நிரந்தர தீர்வுக்கு செல்ல வேண்டும் என பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை விவகாரம் தொடர்பில் மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும் பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அவர்களுக்கும் இடையில் இன்று (03) அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள கல்முனை உப பிரதேச செயலக கலந்தாய்வுக் குழு கூட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் இதன்போது கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை அவருக்கு தெளிவுபடுத்தியதுடன் குறிப்பாக 2023 நவம்பரில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா. கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பாக மனுதாரர் கலையரசன் முன்வைத்திருந்த பிராத்தனைகளான அந்த உப செயலகத்தை முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தல், நிரந்தர கணக்காளர் நியமனம், நிரந்தர பிரதேச செயலாளர் நியாயம் போன்றவற்றை நீதிமன்றம் நிராகரித்து வழங்கிய தீர்ப்பை அமைச்சரின் செயலாளருக்கு விளக்கியதுடன் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்மானத்திற்கு மாற்றமாக அமைச்சு தீர்மானங்களை எடுக்கும் போது ஏற்படும் சட்ட சிக்கல்களையும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நிரந்தர தீர்வு காண அமைச்சு நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள சகல மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடனும் கலந்துரையாடி நிரந்தர தீர்வுக்கு செல்லவேண்டும் என்றும் வலியுறுத்தியாக தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூல மகஜரும் பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அவர்களிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கையளித்துள்ளார்.

No comments: