
காஸாவில் ஹமாஸ் படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் காணொளி, அந்த குழுவின் எல்லையற்ற மனிதாபிமானமற்ற தன்மையை வெளிப்படுத்தியதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாகஹமாஸ் படைகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள மூன்று காணொளிகளில் இஸ்ரேலியர்களான Rom Braslavski மற்றும் Evyatar David ஆகியோரின் நிலைமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் படைகள் சிறை பிடித்தவர்களில் இந்த இருவரும் அடங்குவர். கடந்த 8 மாதங்களாக காஸா மக்களுக்கு உணவு உட்பட எந்த அத்தியாவசிய பொருட்களையும் அனுமதிக்காமல் தடுத்து வந்த இஸ்ரேல் நிர்வாகம், உதவிகள் அனைத்தையும் ஹமாஸ் படைகள் கொள்ளையிட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வந்தது.
இந்த நிலையிலேயே காஸா மக்கள் போன்று, பணயக்கைதிகளும் பட்டினியால் வாடுவதாக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் நிர்வாகத்தினருக்கு உணர்த்த ஹமாஸ் படைகள் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அது கொடூரத்தின் உச்சம் என்றும் மனிதாபிமானமற்ற தன்மை என்றும் ஹமாஸ் படைகள் என்றாலே இது தான் எனவும் ஜனாதிபதி மேக்ரான் கொந்தளித்துள்ளார்.
மேலும், பிரான்சின் முழுமையான முன்னுரிமை என்பது அனைத்து பணயக்கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதாகும் என தமது சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளியில் காட்டப்பட்டுள்ள இருவரும் மிகவும் பலவீனமாகவும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர். மட்டுமின்றி, டேவிட் என்பவர் தமது சவக்குழியை தாமே தோண்டுவதாக குறிப்பிட்டுள்ளது தனியாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாகவும், போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் காஸாவில் ஹமாஸ் படைகளின் ஆட்சியை ஏற்க முடியாது என்றும் மேக்ரான் வாதிட்டுள்ளார்.
மேலும் ஹமாஸ் படைகள் ஆயுதங்களைக் கைவிடுவதுடன், இனி எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் நுழைவதை தடுக்கவும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
ஹமாஸின் கொடூரமான குற்றங்களால் காஸாவில் உள்ள மக்கள் தொடர்ந்து துன்பப்படக்கூடாது. அது தனது ஆயுதங்களைக் கைவிட்டு அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha தெரிவித்துள்ளார்.

காஸாவில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ள 49 பணயக்கைதிகளில் பிராஸ்லாவ்ஸ்கி மற்றும் டேவிட் ஆகியோர் அடங்குவர். 2023 அக்டோபர் தாக்குதலில் கடத்தப்பட்ட 251 பணயக்கைதிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் இதுவரை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 60,430 கடந்துள்ளது.
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 1200 பேர்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐ.நா மன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments: