News Just In

8/22/2025 04:53:00 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்து சிறப்பு செயலமர்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்து சிறப்பு செயலமர்வு!


நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட் அவர்களின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிப்லி எவ்.எச்.ஏ. அவர்களின் நெறிப்படுத்தலிலும், “இந்தியாவில் உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த சிறப்பு செயலமர்வு, 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விபுலாந்தர் கலாச்சார நிலைய (ICCR) பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குரன் தத்தா கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயனுள்ள உரையை வழங்கினார்.

தனது உரையில் அவர், இலங்கைக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்து, தேயிலைத் தொழில் வளர்ச்சி, பன்முக கலாச்சார ஒற்றுமை போன்றவற்றை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன், இந்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நடைமுறை, விண்ணப்பிக்கும் முறை, A2A Portal வழியாக ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்முறை உள்ளிட்டவை பற்றி விரிவாக விளக்கினார்.
“விமான டிக்கெட், தங்குமிடம், கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை என அனைத்தையும் இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது” என வலியுறுத்தினார். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், IITs, IIMs, Indian Institute of Science போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை எடுத்துக்காட்டினார்.

மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அரபி, பாரசீக, இஸ்லாமியக் கல்வி துறைகள் தனித்துவமாக இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்த செயலமர்வில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக், விரிவுரையாளர் எம்.எஸ். சனூமி, தொழில் வழிகாட்டி பிரிவின் ஆலோசகர் எல்.ரீ.எம். இயாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்வி–பதில் அமர்வில் கலந்து கொண்டு, இந்திய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவான புரிதலை பெற்றனர்

No comments: