News Just In

8/10/2025 06:20:00 AM

நமது சட்டத்தரணிகள் மண்டேலா, ஆபிரகாம், அம்பேத்கர் போன்றவர்களை போல ஆகுவது எப்போது?- மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.ரொஸ்கி உரை

நமது சட்டத்தரணிகள் மண்டேலா, ஆபிரகாம், அம்பேத்கர் போன்றவர்களை போல ஆகுவது எப்போது?- மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.ரொஸ்கி உரை


மீரா எஸ் இஸ்ஸதீன் , நூருல் ஹுதா உமர்
மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கற்றோர் குழாமின் புத்திஜீவிகள் குழு ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்கும் அளவுக்கு திருமதி ஆரிக்கா காரியப்பர் ஆளுமை உடையவராக பங்கமைத்து இருக்கின்றார். சகோதரத்துவம், சமத்துவம் போன்ற மனித விழுமியங்களை வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல்; அதை நடைமுறைப்படுத்தி காட்டுகின்ற வல்லமையையும் பக்குவத்தையும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்தவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
என்ற விடயம் இந்த இரண்டு வளர்ச்சி நிலையிலும் ஆரோக்கியமான திசையில் நம்மை அழைத்துச் செல்லும் என்பது என்னுடைய அன்பான எதிர்பார்ப்பு என கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே.ரொஸ்கி தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ரஜீவ் அமரசூரிய ,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று அக்கரைப்பற்றுக்கு விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே.ரொஸ்கி அவர்கள் உரையாற்றுகையில் இதனை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒரு அக்கினிக் குஞ்சு. சட்டம் பயின்றவர்கள் சிலர் இதை உலகத்திலே நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நெல்சன் மண்டேலா சட்டம் பயின்றார் கோடிக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆப்ரஹாம் லிங்கன் அவர் பல்கலைக்கழகத்துக்கும் செல்லவில்லை; முறையான சட்டக் கல்வியை பயிலவும் இல்லை. தானே, சட்டம் பயின்று அவர் சட்ட பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணி ஆனார். ஆப்ரஹாம் லிங்கன் சட்டம் பயின்றதால்; பல கோடி அடிமைகள் விடுதலை பெற்றனர். அம்பேத்கர் சட்டம் பயின்றதால் பல கோடி அடிமைகள், தீண்டத்தகாதவர்கள், அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்கள் விடுதலை பெற்றிருக்கின்றனர். நாம் சட்டம் பயின்றதால் யார் விடுதலை பெற்றிருக்கிறார்கள்? நாம் அமைதியாக அமர்ந்து எம்மால் விடுதலை பெற்றவர்களை நிரலிட்டு பார்த்தோமென்றால் மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கலாம்.”என்று குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வீ.ராம கமலன், ஏ.எம்.எம்.றியால், கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ். எம். சம்சுதீன், கல்முனை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் ஏ.ஜீ. பிறேம் நவாத், உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாக கருத்துரைகள் முன் வைக்கப்பட்டன.
தேசியத் தலைவரைக் கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தப்பட்டது. இது தவிர கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஆரிக்கா காரியப்பரைக் கெளரவிக்கும் முகமாக சட்டத்தரணிகளினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது

No comments: