அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இலங்கையின் அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதற்கு முன்னர் இந்தப் பதவிக்கு முஸ்லிம் பெண்ணொருவர் நியமனம் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா, அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியராகப் பணியாற்றினார்.
அஞ்சல் திணைக்களத்தினால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகர்களுக்கான பரீட்சையில் அஞ்சல் திணைக்களத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றிய 39 பேர் தேர்ச்சிபெற்றிருந்தனர்.
அவ்வாறு சித்தியடைந்தவர்களில் 12 பேர் அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்கர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரச சேவைகள் ஆணைக்குழுவின் அறிவித்தலின் பிரகாரம் இந்த பதவி உயர்வு நியமனம் கடந்த 03.07.2025 அன்றைய தினத்திலிருந்து அமுலாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: