நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அறைகூவல்
இனவாத அடிப்படையில் சிந்திப்போர் இனிமேலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்து, சமூக ஒற்றுமையைச் சீர்குலைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.
ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் பிரதித் தவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோரின் கடமையேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்சொன்ன அறைகூவலை விடுத்தார்.
நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவிசாளர், பிரதித் தவிசாளர் உறுப்பினர்கள் அதிகாரிகள் பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம்,
ஏறாவூர் பிரதேசத்திலே தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு அபிவிருத்திகளை செய்து வந்துள்ளார்கள் என்பது கடந்த கால வரலாறு.
அந்த வகையில் இந்தப் பிரதேசம் ஏனைய பிரதேசங்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கிலே தமிழ் முஸ்லிம் சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஏறாவூரில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்படுவது ஓர் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த சூழ்நிலைக்கு ஏறாவூர் முஸ்லிம் சமூகமும் ஏறாவூர் நகர சபையும் வழிவகுத்திருக்கின்றது.
மேலும், ஏறாவூர் நகரப் பிரதேசம் இனிமேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்கு ஒரு சிறந்த இடமாகவும் முன்னுதாரணமாகவும் இருக்கும் என்பது எமது திடமான நம்பிக்கையாகும்
அதேவேளை, இந்த நல்வாய்ப்பை ஏறாவூர் நகர சபையில் பிரதித் தவிசாளர் பதவியை இங்குள்ள நகர சபைத் தவிசாளர் நழிம் அவர்களும் ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருப்பதை இப்பொழுது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஒரு சிலர் இனவாத விஷமப் பிரச்சார உத்தியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
இனத்தை விற்று விட்டார்கள் என்று இவ்வாறு இனத்துவேஷம் செய்வது மோசமான செயலாகும். கடந்த காலத்தில் இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு இன ஒற்றுமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்.
77ஆம் ஆண்டிற்று முன்பு அரசியலிலே தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள். குறிப்பாக முன்னாள் உள்நாட்டுவலுல்கள் நீதி அமைச்சராக இருந்த கே. டபிள்யூ தேவநாயகம் அவர்களை கல்குடாத் தொகுதி முஸ்லிம் மக்கள்தான் தொடர்ச்சியாக பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.
எனவே, அப்படிப்பட்ட பழைய சமூக ஒற்றுமைக்கும், இணக்கப்பாட்டிற்கும், இனவாதமற்ற தன்மைக்கும் நாம் மீளத் திரும்ப வேண்டும். இனவாதிகள் இன ரீதியாக எங்களைப் பிரிக்கும் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.
நடந்து முடிந்த உள்ளுரதிகார சபைத் தேர்தலில் 17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபைக்குத்; தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மதுசாலி நழிமும் பிரதித் தவிசாளராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரனும் தெரிவு செய்யப்பட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
ஏறாவூர் நகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், ஐக்கிய தேசியக் கட்சி நால்வர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2, உட்பட இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகியவை தலா ஒரு உறுப்பினரைக் கொண்டுள்ளன.
No comments: