News Just In

5/14/2025 07:50:00 AM

சாய்ந்தமருது பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு அங்குராப்பணம்!

சாய்ந்தமருது பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு அங்குராப்பணம்!



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரிவுக்குள் காணப்படும் குற்றச் செயல்களைக் குறைத்து, பொலிசாரின் கடமைகளை இலகுபடுத்தும் பொருட்டும், பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும், தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசனைக்குழு ஒன்றை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஆலோசனைக் குழுவின் தலைவர் எம்.கே. இர்ஷாத் கான் தலைமையில் 2025.05.13 ஆம் திகதி இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக் குழுவின் செயலாளர் எம்.எம். உதுமாலெவ்வை JP (ஓய்வு பெற்ற போதனாசிரியர்- VTA அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. .இப்னு அஸார் கலந்து கொண்டார். மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின்போது சாய்ந்தமருதில் போக்குவரத்துச் சட்டம் மற்றும் சுற்றாடல் மாசுபடுவதை தடுத்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதில் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுவது தொடர்பிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பிலும் பொலிசாரினால் கையாளக்கூடிய ஏனைய பல்வேறு விடயங்களை செயற்படுத்த ஆலோசனைகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக சாய்ந்தமருதில் வீதி ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொலிசாரின் ஒத்துழைப்புடன் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம்கண்டு தண்டனை வழங்கல், சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு விஷேட போக்குவரத்து வழிமுறைகளை கையாளுதல், இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வீதிகளில் கூடியிருப்பவர்கள் மற்றும் உலாவித் திரிபவர்கள் தொடர்பில் விஷேட கண்காணிப்பை செலுத்துதல் மற்றும் நள்ளிரவுகளில் திறந்திருக்கும் கடைகள் தொடர்பில் கண்காணிப்புச் செலுத்துதல், சிரமதான நிகழ்வுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட பிரமுகர்களுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசாரும் கலந்து கொண்டனர்

No comments: