உலக சுகாதார ஸ்தாபனம், ஏப்ரல் மாதத்தினை நகர்வு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனையொட்டி சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு உடல், உள ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதனையடுத்து உடற்பயிற்சியினை ஊக்குவிக்கும் பொருட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வொன்று 08) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்துடன் இணைந்து கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவு குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ,எல்.ஏ.மஜீட், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.நிஜாம், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.ஏ.எம்.புஹைம் வளவாளராகக் கலந்துகொண்டு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பாக விரிவுரையாற்றியதுடன் உடற்பயிற்சியின் படிமுறைகள் மற்றும் ஒழுங்கின் அடிப்படையில் செயல்முறை பயிற்சிகளையும் வழங்கினார்
No comments: