தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு – செலவு திட்டத்துக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் நிச்சயம் நாட்டம் கொள்ளும். இந்தத் தேர்தலை எவ்வாறு ஈழத் தமிழ் கட்சிகள் எதிர்கொள்ளவுள்ளன? இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியென்னும் வகையில் உள்ளூராட்சித் தேர்தலிலும் அந்தக் கட்சியே வடக்கு – கிழக்கில் ஒப்பீட்டடிப்படையில் அதிக சபைகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு எனலாம்.
ஆனால், நிலைமை மிகவும் சவாலானதாகவே அமைந்திருக்கும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களித்திருக்கும் நிலையில் அந்தக் கட்சி வடக்கு – கிழக்கில் கணிசமான உறுப்பினர்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு என்பதையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் தொடர்பில் மக்கள் முன்னரைப் போன்று சாதாரணமாக சாய்ந்துவிடும் நிலைமை தற்போதில்லை.
குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சியும் அதேபோன்று தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் பெரும்பாலும் கிராமப்புற மக்களின் வாக்குகளை நம்பியிருக்கும் – அதிலும் பழையவர்களின் வாக்குளை நம்பியிருக்கும் கட்சியாக சுருங்கிவிட்டது. கிராமப்புற இளைய தலைமுறையினர் ஒப்பீட்டடிப்படையில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளை ஆதரித்த போதிலும் நகர்ப்புற நிலைமை பெரும்பாலும் மாற்றமடைந்து வருகின்றது.
இதேவேளை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் பெருமளவுக்கு மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. முன்னரைப் போன்று உரிமை வாதம் அரசியலில் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய அரசியல் நிலைமை பலவீனமடைந்து செல்கின்றது. வெறும் கோஷ அரசியலைக் கொண்டு இனியும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வது மிகவும் கடினமானது. இதனைப் புரிந்து கொண்டுதான், தமிழ்க் கட்சிகளும் தங்களின் உள்ளூராட்சி தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளூராட்சி தேர்தலிலும் தமிழ் கட்சிகள் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும்.
உள்ளூராட்சித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அதில் முக்கியத்துவம் பெறுவர். கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் ஆகக் குறைந்தது சபையில் ஒழுங்காக பேசக்கூடிய ஆற்றல் கூட இல்லாதவர்களாவே இருந்திருக்கின்றனர். இப்படியானவர்கள் எல்லாம் உறுப்பினர்களா என்று கவலைப்படுமளவுக்கே கூட்டமைப்பின் கடந்தகால சபைகள் இருந்திருக்கின்றன.
உள்ளூராட்சி சபையின் விதிகளை படித்து, அதனை உச்சளவில் பயன்படுத்துவது எவ்வாறு என்பதைப் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவுள்ளவர்களே உள்ளூராட்சி சபைகளை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் – அவ்வாறில்லாது போனால், அதனை உச்சளவில் பயன்படுத்த முடியாமல் போகும். ஈழத் தமிழர் இன்று வந்தடைந்திருக்கும் கையறு நிலை அரசியல் சூழலில், இருக்கும் ஒவ்வொரு கட்டமைப்பையும் உச்சளவில் பயன்படுத்தும் திறனே தமிழர் களுக்கான அரசியலாக இருக்க முடியும். உள்ளூராட்சித் தேர்தலுக்கான வியூகங்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிந்திக்கும் போது முதலில் இந்த விடயத்துக்கே முன்னுரிமையளிக்க வேண்டும்
நன்றி ஈழநாடு
No comments: