News Just In

12/19/2024 03:02:00 PM

வடக்கில் பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோய் விலங்குகளிலும் பரவக் கூடிய அபாயம் - சுகாதாரத்துறை அதிகாரி விடுத்த எச்சரிக்கை!


வடக்கில் பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோய் விலங்குகளிலும் பரவக் கூடிய அபாயம் - சுகாதாரத்துறை அதிகாரி விடுத்த எச்சரிக்கை




வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பாக்டீரியாக்கள் வாழும்.

எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவானது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து பரவ வாய்ப்புள்ளது.

மழைக் காலங்களில் குடி நீர்க்கிணறுகளில் கூட தொற்றுக் கிருமிகள் கலக்கக்கூடும்.

தொற்றடைந்த நீரைப் பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் இந்த பாக்றீரியாக்கள் உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது.

இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளன.

குறித்த லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் பாற்றீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளில் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ் விலங்குகளின் மலம், சிறுநீர் போன்ற கழிவுகளில் இந் நோய்க்கிருமி வெளியேறி இவ் விலங்குகள் வாழும் சூழலில் நெருங்கி பழகும் மனிதனிலும் இந் நோயக்கிருமி பரவி நோய்ப்பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மனிதனின் குருதியில் நோய்கிருமிகள் உள்ளதை இரத்தப்பரிசோதனைகள் மேற்கொண்டு உறுதிப்படுத்துவதை போலவே வளர்ப்பு விலங்குகளின் குருதி, சிறுநீர் ஆகியவற்றை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தி நோய்கிருமியின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த முடியும்.

மேலும் வடக்கு மாகாணத்தின் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலத்தில் மனிதரில் அடையாளம் காணப்பட்ட இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வளர்ப்பு விலங்குகளில் இந்நோயின் கிருமிகள் தொற்றாது.

பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இச்செயற்பாடுகளில் நேரடியாக இணைந்து கொள்ளும் பொருட்டு 18.12.2024 திகதியன்று மத்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது ஆய்வுகளை மேற்கொண்டள்ளனர்.

பல்வேறு பகுதி பண்ணை விலங்குகளின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.

இந்நோய் பரவாது தடுப்பதற்கு கொதிக்கவைத்த நீர் பருகுதல்,சுகாதாரம் பேணப்படாத உணவு நிலையங்களில் உண்பதை தவிர்த்தல், செருப்பு அல்லது பூட்ஸ் அணிந்து வெளியில் செல்லல், வெளியே போய் வந்த பின் கை, கால்களை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் கால்நடைகளை நீர் தேங்கியுள்ள பிரதேசங்களில் கட்டி வைத்தல் மற்றும் மேய்ச்சலுக்கு அனுப்புதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளல் அவசியம்.

இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மனிதரில் தொற்றுக்களை தவிர்ப்பதற்கு விலங்குகளின் கழிவுகள் தேங்கும் பகுதிகளில் உடற்பகுதிகள் நேரடி தொடுகையுறுவதை தவிர்த்தல் அவசியமானது.

இந்நோயானது நாய்களையும் தாக்க வல்லது என்பதால் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களின் சிறுநீர் மற்றும் மலம் என்பன மனிதரில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நினைவிற் கொள்ளல் அவசியம்.

நாய்களில் இந்நோய் ஏற்படாது தடுப்பதற்கான தடுப்பூசிகள் இலங்கையிலும் சகல பிரதேசங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: