(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமீபத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவு ஊக்க தன்னார்வ அமைப்புக்களால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிமிர்னா திருச்சபையின் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சின்ன ஊறணி, சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, நாவற்கேணி, சுவிஸ் கிராமம், கிராய்மடு, அமிர்தகழி மட்டிக்களி, கருவேப்பங்கேணி ஆகிய கிராம பிரிவுகளில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ள குடும்பங்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சிமிர்னா திருச்சபையின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் இயக்குநருமான அருட்பணி எஸ்.வசந்தகுமார் தலைமையில், அதன் திட்ட முகாமையாளர் செல்வி. அமலதாஸ் கேமினியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா நிவாரணப் பொருள் பொதிகளை பயனாளிகளுக்குக் கையளித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் கழகங்கள் இணைந்து, சுமார் ஒரு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நிவாரண பொருள்களை மாவட்டச் செயலாளரிடம் கையளித்துள்ளனர். இதில் உலர் உணவு, படுக்கை விரிப்புக்கள், பாய், தலையணை உள்ளிட்ட உடுதுணிகளும் உள்ளடங்குகின்றன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஈச்சன்தீவு கிராமத்தில் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு சிவன் அருள் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகர் வைத்தியர் ஜே. நமசிவாயத்தின் ஒழுங்கமைப்பில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் செயலாளர் கே. பவளசிங்கம் உலர் உணவுப் பொருட்களைப் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
No comments: