News Just In

12/08/2024 01:05:00 PM

சம்மாந்துறை பொது நிறுவனங்கள் கூடி மீட்பு பணியாளர்களுக்கு கௌரவமளிப்பு !

சம்மாந்துறை பொது நிறுவனங்கள் கூடி மீட்பு பணியாளர்களுக்கு கௌரவமளிப்பு !

நூருல் ஹுதா உமர்

கடந்த மாதம் இறுதியில் மாவடிப்பள்ளி பிரதேச வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்ட 13 பேரை மீட்கும் பணியில் களப்பணியாற்றிய மீட்புப் பணியார்களை பாதிக்கப்பட்ட சம்மாந்துறை மக்கள் சார்பில் பாராட்டி நன்றி கூறும் நிகழ்வு சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர்கள் சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை திராஸதுல் இஸ்லாமிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 26.11.2024 இல் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது சிக்குண்டு மரணித்த ஜனாஸாக்களை கரை சேர்ப்பதிலும், காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்குரிய மார்க்கக் கடமைகளை செய்து நல்லடக்கம் செய்வதிலும் மனித நேயத்துடன் செயற்பட்ட மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் அவர்களுக்கு பக்கபலமாக உழைத்த சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, காரைதீவு இராவணா அமைப்பு, கல்முனை மட்டுப்படுத்தப்பட்ட ஆழ்கடல் மீனவ சுழியோடிகள் நீரியல்வள கூட்டுறவு சங்கத்தினர், ஊடகவியலாளர்கள் ஆகியோரை சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர்கள் சபையுடன் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சம்மாந்துறை கிளை, மஜ்லிஸ் அஸ்-சூரா உள்ளடங்கலாக சம்மாந்துறை பொது நிறுவனங்கள் கூடி கௌரவித்தது.

வவுனியா முன்னாள் அரசாங்க அதிபரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவருமான ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள், சம்மாந்துறை பள்ளிவாசல்கள்களின் நம்பிக்கையாளர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சம்மாந்துறை கிளை தலைவர் உட்பட நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது- மாளிகைக்காடு கிளை தலைவர் உட்பட நிர்வாகிகள், மஜ்லிஸ் அஸ்-சூரா தலைவர் உட்பட நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், தனவந்தர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மரணித்தவர்களுக்காக வும், மீட்புப்பணியாளர்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், இதன்போது விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

No comments: