News Just In

12/31/2024 03:31:00 PM

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானது!


புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானது!



அண்மையில் முடிவடைந்த 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சை ஆணையர் நாயகத்துக்கு, நீதிவான் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த மூன்று பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

No comments: