நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் அரசியல் மாற்றம் சிறந்ததொரு வெளிப்பாடாக காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நேற்றையதினம்(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பழைய அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
வரப்பிரசாதங்களுடன் வாழ்ந்த பிரபுக்கள் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள பலத்தை அதிகார மோகத்துக்காக பயன்படுத்தமாட்டோம். மக்களின் நன்மைக்காக மிக கவனமாக பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம்.
வடக்கு, கிழக்கு உட்பட மலையக பக்கம் என 21 தேர்தல் மாவட்டங்களிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளோம். தமிழர்களின் அரசியல் மாற்றம் சிறந்ததொரு வெளிப்பாடாகும்.
எம்மீதான மக்கள் நம்பிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியின் கனத்தை நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். எம்மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆகவே, அந்த நம்பிக்கையை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். இது ஒரு சாதாரண வெற்றியல்ல. பல ஆண்டு காலமாக அரசியலில் வலுவாக செயற்பட்டவர்களை வீழ்த்தியே வெற்றிப் பெற்றுள்ளோம்.
நாட்டு மக்கள் எம்மீது இந்தளவுக்கு அதீத நம்பிக்கை கொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தை மக்கள் அளித்துள்ளார்கள்.
நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரவில்லை. இருப்பினும் மக்கள் வழங்கியுள்ளார்கள். ஆகவே இந்த பலத்தை கவனமாக பாதுகாக்கும் பொறுப்பும், சவாலும் எமக்குண்டு.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் வழங்கிய மூன்றில் பெரும்பான்மை பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதால் தான் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை வழங்க கூடாது என்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டது.
ஆகவே, கிடைக்கப் பெற்றுள்ள பலத்தை அதிகார மோகத்துக்காக பயன்படுத்த மாட்டோம். மக்களின். நன்மைக்காக மிக கவனமாக பயன்படுத்துவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்
No comments: