News Just In

11/12/2024 12:24:00 PM

றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல்!


றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல்




வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் நேற்று மாலை 8 மணியளவில் காதர் மஸ்தானின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த றிசாட் பதியுதீன் அவர்களின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்று நேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதி ஊடாக பயணித்துள்ளது.

இதன்போது, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்று நேரத்தில் அது கலவரமாக மாறி றிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் உட்பட வாகனத் தொடரணி மீது மக்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

றிசாட் பதியுதீன் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகன கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டதுடன், அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலையடுத்து வாகனத் தொடரணி அப்பகுதியிலிருந்து சென்றிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

கலவரநிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் கூட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற காதர் மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: