வெற்றிக்கு பங்காற்றிய அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றிய அநுர அரசு - சஜித் தரப்பு குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அரச உத்தியோகத்தர்களே பெரும் பங்களிப்பை வழங்கினர். ஆனால் அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளது. இதனால் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சியின் போது நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் 100 நாட்களுக்குள் எம்மால் நிறைவேற்ற முடிந்தது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறிக் கொண்டிருக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பயணித்து முன்னேறிய நாடு இல்லை என்று அவர் தேர்தலுக்கு முன்னர் கூறினார்.
அதே போன்று அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
வரியைக் குறைப்பதாகக் கூறியதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது.
இதன்படி கட்சி மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக பிரேமச்சந்திரவைத் தொடருமாறு கட்சி கோரியுள்ளதுடன் அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
No comments: