இலங்கை தமிழ் அரசுக் கட்சியானது ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை அறிவித்துவிட்டது. அந்த அறிவிப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சிவஞானம் சிறீதரன் கூறுகின்றார். ஆரம்பத்திலிருந்தே சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றார். சுமந்திரன் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றார். சுமந்திரனின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தற்போது மத்திய குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சுமந்திரன் கூறியது போன்றே தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. முதல் நகர்வில் சுமந்திரன் வெற்றிபெற்றுவிட்டார்.
இதேபோன்று முதல் நகர்வில் சிறீதரனின் நகர்வு சறுக்கிவிட்டது. அதாவது கட்சியைத் தன் வழிக்குக் கொண்டுவருவதில் சிறீதரனால் வெற்றிபெற முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் சிறீதரனின் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றன? சுமந்திரனால் திணிக்கப்பட்ட கட்சித் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டு தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கைவிடப்போகின்றாரா? அல்லது தனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கப்போகின்றாரா? தமிழ்ப் பொது வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தமிழ்த் தேசிய தேர்தல் விஞ்ஞாபனமாகவே அது வெளியிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் அரசுக்கட்சி சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றது.
இது அடிப்படையிலேயே தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானது. அத்துடன் அதன் அரசியல் வரலாற்றுக்கும் எதிரானது. இதனை சிறீதரன் ஆதரிக்கப்போகின்றாரா? சிறீதரனுக்கு இரண்டு சவால்கள் உள்ளன. ஒருவேளை அவர் கட்சியின் தீர்மானத்தோடு இணைந்து செல்ல முயற்சித்தால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலிருந்து சிறீதரன் விலகிச் செல்வதாகவே நோக்கப்படும்.
தொடர்ந்தும் அவர் தமிழ்த் தேசிய அரசியலில் ஓர் அடையாளமாக இருக்க முடியாது போகும். ஏனெனில் அவர் சுமந்திரனின் நிலைப்பாடோடு ஒத்துப்போகின்றார். அத்தோடு இன்னொரு சவாலையும் அவர் எதிர்கொள்ள நேரிடும். அதாவது கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் சிறீதரனுக்கு எதிர்நிலையில் இருக்கும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் பின்புலத்தில் சிறீதரனால் எவ்வாறு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடியும்? இந்தப் பின்புலத்தில் நோக்கினால் சிறீதரன் தொடர்ந்தும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பேசுவதற்கு அப்பால் பிரசாரங்களில் – குறிப்பாக மேடைகளில் பேச வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம்தான் சிறீதரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார் என்பதை நிரூபிக்க முடியும். தமிழ் அரசுக் கட்சியின் பிரேமதாஸ ஆதரவு நிலைப்பாடானது அடிப்படையிலேயே தவறானது.
அரசியல் ரீதியில் தமிழ் அரசுக் கட்சியை கொள்கை நிலையில் சிதைக்கக்கூடியது. இவ்வாறானதொரு நிலைப்பாட்டுடன் சிறீதரன் ஒருபோதும் ஒத்துப்போக முடியாது – ஒத்துப்போகவும்கூடாது. தமிழ் அரசுக் கட்சியின் பிரேமதாஸ ஆதரவு நிலைப்பாடானது. சிறீதரனின் அரசியலை நிறுத்துப் பார்க்கும் ஒரு சோதனை முயற்சியாகவே மாறியிருக்கின்றது. இந்தப் பரீட்சையில் சிறீதரன் வெல்லப்போகின்றாரா அல்லது தோற்கப்போகின்றாரா? முடிவு அவரின் தீர்மானத்தில்தான் தங்கியிருக்கின்றது
நன்றி; ஈழநாடு
No comments: