News Just In

9/04/2024 02:00:00 PM

தலைமையற்ற தமிழ் அரசு கட்சி!



இப்படியொரு கேள்வியை கேட்டால், கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வதை மட்டுமே தமிழ் அரசுக் கட்சியினர் பதிலாகத் தருகின்றனர். ஒருகாலத்தில் ஆளுமைமிக்க அரசியல்வாதிகளின் பாசறையாக இருந்த தமிழ் அரசுக் கட்சி தற்போது தலைமை என்னும் சொல்லை உச்சரிக்கக்கூட தகுதி இல்லாதவர்களிடம் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கின்றது. இரா.சம்பந்தன் தலைவராக இருக்கின்றபோது, பல விமர்சனங்கள் இருந்தபோதிலும்கூட தமிழ் அரசுக் கட்சி கீழ்நிலைக்குச் சென்றிருக்கவில்லை. ஒப்பீட்டடிப்படையில் சம்பந்தனின் தலைமைத்துவமே அதற்கான காரணம். ஏனெனில், சம்பந்தன் தீர்மானிக்கும் இடத்தில் இருந்தவரைக்கும் கட்சிக்குள் எவராலும் சம்பந்தனை மீறி முகம் காட்ட முடிந்திருக்கவில்லை.

ஆனால், ‘அண்ணன் எப்போது காலியாவான் திண்ணை எப்போது காலியாகும்’ என்பதுபோல பலர் முகம் காண்பிக்க முற்பட்டனர். கட்சிக்கான புதிய தலைவருக்கான போட்டியில் இரண்டு பேர் போட்டியிடத் தீர்மானித்தபோதே கட்சியின் எதிர்காலம் ஊசலாடத் தொடங்கிவிட்டது. சிறீதரன் வெற்றி பெற்றமையைத் தொடர்ந்து கட்சிக்குள் இரண்டு அணிகள் என்பது நிரந்தரமானது. இதன் விளைவுதான் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தும் – எதிர்த்தும் தமிழ் அரசுக் கட்சிக்குள் அணிகள் உருவாகின. ஒருவேளை கட்சிக்குள் பிளவு ஏற்படாது இருந்திருந்தால் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு ஆதரவான பார்வை கட்சிக்குள் ஏற்பட்டிருக்காது. ஏனெனில், முள்ளிவாய்காலுக்கு பின்னரான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தென்னிலங்கை வேட்பாளர்களை எவ்வித உடன் பாடும் இல்லாமலேயே ஆதரித்திருந்தது.

அதாவது, வெற்றுக் காசோலையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை அடமானம் வைத்தது. இப்போதும் அதனையே மேற்கொண்டிருக்கின்றது. சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தீர்மானத்தையும் முன்னரைப் போன்றே மேற்கொண்டிருக்கின்றது. சஜித் பிரேமதாஸ இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவைக் கோரியிருக்கவில்லை. ஆனால், சஜித் பிரேமதாஸவுடன் உடன்பாடு செய்திருக்கும் ஏனைய மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்துமே தெளிவான புரிந்துணர்வு உடன்பாட்டின் அடிப்படையில்தான் தங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றன.

ஆனால், தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வை பெற்றுத் தரப்போவதாகக் கூறிவரும் இலங்கை தமிழ் அரசு கட்சி எவ்வித உடன்பாடும் இல்லாமல் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்று வெளியில் அறியப்படும் மாவை சேனாதிராசா கூட்டத்தில் பங்கு கொண்டிருக்கவில்லை. பின்னர் ‘எனக்கு எதுவும் தெரியாது, அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார் – ஆனால் மறுதினமே தலைகீழாக அறிக்கையிட்டிருந்தார். மாவை சேனாதிராசா தலைமைக்கான மனோநிலையில் இல்லை என்பது மீண்டு மொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசுக் கட்சி எந்தளவுக்கு தலைமையற்ற கட்சியாக சீரழிந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். தனிநபர்களின் கதிரை ஆசைக்காக கட்சியின் சுவாசம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆனால், அதனைத் தடுப்பதற்கான ஆளுமையற்ற இயாலாவாளியாகவே மாவை சேனாதிராசா இருக்கின்றார் – ஆகக் குறைந்தது, கட்சியின் உண்மையான நிலைமையை புரிந்துகொள்ளக்கூட மாவையால் முடியவில்லை

No comments: