News Just In

9/18/2024 01:33:00 PM

கோபித்துக் கொண்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பின் பூநொச்சிமுனை, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு செவ்வாய்க்கிழமை 17.09.2024 சென்ற அமைச்சர் கரையோர சமுதாய மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

கடற்றொழில் அமைச்சருடன், செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோரும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் மீனவ சமுதாய மக்களின் பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்.

நிகழ்வுகளில் அந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பூநொச்சிமுனை மீனர்களின் பிரச்சினைகளுக்கும் வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தன்னால் முடிந்தளவு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

நிகழ்வுகளில் தொடர்ந்து சமகால நாட்டு நடப்புகள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்களின் கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதனால் இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக நமது மீனவர்களின் வாழ்வும் வளமும் சூறையாடப்படுவதை வேறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்

மேலும், இலங்கை மீனவர்களுக்கு கடந்த பொருளாதார நெருக்கடிக் காலங்களில் தொடங்கி தற்போது வரை பல்வேறு வகையான சலுகைகளையும் மானியங்களையும் உதவிகளையும் வழங்கி வருகின்றோம்.

இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் வேண்டாம் என்று கூறியும் அவர்களுடன் போராடியே இந்த உதவிகளைப் பெற்றுத் தருகிறோம்.

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்று நலிவடைந்த பொருளாதாரத்தை நிமிர்த்தியபோது அவற்றை வேண்டாம் என்று கடுமையாக எதிர்த்த சஜித் அனுர போன்றவர்கள் இப்பொழுது சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை வரவேற்றிகிறார்கள்.

ஆனால், அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. அரசியலுக்காக அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்காமல் நமது நாட்டை இயக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

கடல்; வளம், மீன்பிடி சம்பந்தமாக புதிய சட்டங்களைக் கொண்டு வந்து நமது மீனவர்களைப் பாதுகாக்க இருக்கின்றோம்.

நாடு இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதியவர் வந்தால் பூச்சியத்திலிருந்து தொடங்க வேண்டும். எனவே நாட்டை சிறிது சிறிதாக மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்ஹவை தேர்ந்தெடுத்தால் நாட்டின் பொருளாதாhரம் சுமுகமாக முன்னேறும்.” என்றார்.

No comments: