News Just In

8/01/2024 07:10:00 PM

எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்! மாகாண ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிச் செயலமர்வு!

“எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்” எனும் குறிக்கோளை இலக்காகக் கொண்டு பீஸ் ஸ்ரீலங்கா அமைப்பு நாடளாவிய ரீதியில் பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி வருவதாக பீஸ் சிறிலங்கா நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான முஹம்மத் மஹ்ரூப் தெரிவித்தார்.

சிறுவர்களின் பிரச்சினைகளைப்பற்றி அறிக்கையிடும்போது நெறிமுறை வழிகாட்டுதல்களையும் தரநிலைகளையும் பின்பற்றும் உயர்ந்த நிபுணத்துவத்தை உருவாக்குதல், சிறுவர்களின் பிரச்சினைகள் குறித்து உணர்வு ரீதியாகவும் துல்லியமாகவும் தகவலளிக்கும் நடைமுறைத் திறன்களை உருவாக்குதல் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களுக்கு இப்பயிற்சிச் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற இத்தகைய செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். செயலமர்வு திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை முடிவுற்றது.

இப்பயிற்சி நெறிகளை தெற்காசிய விமர்சன சிந்தனை முன்னேற்ற நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.சி. றஸ்மின், வைத்திய கலாநிதி சகாய தர்ஷினி ஜெயகுமார், பீஸ் சிறிலங்கா நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான மஹ்ரூப் ஆகியோர் வழங்கினர்.

செயலமர்வில், நசுக்கப்பட்ட குழந்தைகளை வலுப்படுத்தி உற்சாகப்படுத்துதல், நியாயம் மற்றும் பொறுப்புக் கூறலைக் கோருதல், தனிநபர் அந்தரங்கத்தைப் பாதுகாத்தல், நீதி மற்றும் ஒழுக்க நிலைகளைப் பின்பற்றுதல், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மதிப்பளித்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடாமல் பிரச்சினையைப் பற்றி ஆழமாக உசாவுதல் ஊடகங்களில் சிறுவர்களின் பங்குபற்றுதலின் முக்கியத்துவம், சமூக ஊடகங்கள் சிறுவர்கள் பற்றிய விவகாரங்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள், சிறுவர்கள் பற்றி புகாரளிப்பதில் உள்ள நடத்தை விதிகள், சிறுவர்கள் சித்தரிக்கப்படுவதில் உலகளாவிய நீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள், யுனிசெப் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பின் வழிகாட்டுதல்கள் பாதிப்பிற்குப்பின்னரான மன அழுத்தத்தில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கடைப்பிடித்தொழுக வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட சிறுவர் நலன்சார்ந்த பல்வேறு விடயப்பரப்புக்களில் பயிற்சிச் செயலமர்வு இடம்பெற்றது.

இனி வரும் சந்தர்ப்பங்களில் சிறுவர் பிரச்சினைகளை அறிக்கையிடும்போது ஊடகவியலாளர்கள் இந்த நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் செயலமர்வில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் பீஸ் லங்கா நிறுவனத்தின் தொடர்பாடல் உதவி அலுவலர் கௌசல்யா பிரபா, திட்ட உத்தியோகத்தர் ஆர். நதியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
x

No comments: