News Just In

8/03/2024 10:58:00 AM

ஒலிம்பிக்கில் 1972-க்கு பிறகு ஆஸி.யை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாதனை!!




 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் 1972-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அபிஷேக் முதல் கோல் அடித்து உற்சாகம் கூட்டினார். அடுத்து தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் அதனை கோலாக மாற்றி 2-0 என்ற கணக்கில் அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரேக் 25-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 32 நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் 3-வது கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 55-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளேக் கவர்ஸ் பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக மாற்றினார். இறுதியில், ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம்பிடித்தது. ஏற்கெனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதியும் நடைபெற உள்ளன.

No comments: