News Just In

7/26/2024 04:07:00 PM

திருகோணமலையில் அரசகரும மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு


(எம்.எம்.றம்ஸீன்)
அரசகரும மொழிகள் தினத்தினை நடைமுறைப்படுத்தும் முகமாக மாவட்ட செயலகத்திலுள்ள அனைத்து கிளைகளிலுமுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது (25) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரசகரும மொழிகள் வாரம் மற்றும் தினத்தினை முன்னிட்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வாக அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியே இதுவாகும்.

மொழிக் கொள்கையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம், இலங்கையின் அரசகரும மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான சட்டங்கள், அரசகரும மொழிக்கொள்கையின் சட்டப் பின்னணி, 1978 அரசியலமைப்பின் III ஆம் அத்தியாயத்தில் - அடிப்படை உரிமைகள், நிர்வாக கட்டமைப்பு, அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை வழங்குதல், பிரதான அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கல் அலுவலரின் பொறுப்பு (COLIO), அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கல் அலுவலரின் பொறுப்பு (OLIO), அரசகரும மொழிகள் தினத்துடன் இணைந்த வாரத்தை கொண்டாடுதல், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் அனுகூலங்கள் என பல விடயங்கள் இதன்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும் சட்டத்தரணியும் ஏ.சி.எம் முஸில் அவர்களினால் தெளிவூட்டப்பட்டது.


இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: